கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம்; விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து


கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம்; விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் நேற்று சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த 30–ந் தேதி ஒகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி கடற்கரையில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. அதோடு அலைகளின் வேகம் அதிகரித்து கடல் சீற்றமாக காணப்பட்டது.

இதனால், கடற்கரையோர பகுதி மக்கள் பீதியடைந்தனர். கடல் சீற்றம், சூறாவளி காரணமாக நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கும். நேற்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் இருந்ததால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாபயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று வீசிய சூறாவளி காற்று குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், மார்கழி மாதம் தொடங்கினால் காற்று சற்று அதிகமாக வீசும். ஆனால் இன்று (நேற்று) வீசிய காற்று வித்தியாசமாக இருந்தது. வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது என்றார்.


Next Story