விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கள்ளக்காதலி வீட்டில் மர்மச்சாவு


விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கள்ளக்காதலி வீட்டில் மர்மச்சாவு
x
தினத்தந்தி 17 Dec 2017 5:30 AM IST (Updated: 17 Dec 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலி வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக் குமார் (வயது 39). காஞ்சீபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் ஊழியராகவும் பணிபுரிந்து வந்தார்.

இவருடைய மனைவி கவுரி. நந்திவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ரவிக்குமார் மாதாகோவில் கணபதி நகர் பகுதியில் உள்ள மைதிலி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை கவுரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது கணபதி நகரில் உள்ள கள்ளக்காதலி மைதிலி வீட்டில் கணவர் ரவிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மறை மலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூங்கில் தொங்கிய நிலையில் இருந்த ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவிக்குமாரின் மனைவி கவுரி மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் ரவிக்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மறைமலைநகர் போலீசில் கவுரி புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘தனது கணவர் சாவில் சந்தேகம் இருக்கிறது. ஆகையால் அவருடன் தொடர்பில் இருந்த மைதிலி, அவரது தம்பிகள் அலெக்ஸ், அஜித், மற்றும் மைதிலியின் தாய் லட்சுமி ஆகியோரை போலீசார் அழைத்து விசாரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார். மனுவை போலீசார் பெற்றுக்கொண்ட பிறகு முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு ரவிக்குமாரின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ரவிக்குமாரின் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரவிக்குமாரின் சாவில் மர்மம் உள்ளதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ரவிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story