2050–ம் ஆண்டில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1,018 கோடி செலவில் பில்லூர் 3–வது குடிநீர் திட்டம்
கோவை மாநகராட்சியில் 2050–ம் ஆண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆயிரத்து 18 கோடி ரூபாய் செலவில் பில்லூர் 3–வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
கோவை,
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் ஹரிகரன் ஆகியோர் முன்னிலையில் கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 2050–ம் ஆண்டு ஏற்படும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:–
கோவை மாநகராட்சியில் முன்பு 72 வார்டுகள் இருந்தன. அப்போது அதன் பரப்பளவு 105 சதுர கிலோ மீட்டர். பின்னர் அது விரிவாக்கப்பட்டு குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் ஒரு ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டன. இதன் மூலம் கோவை மாநகராட்சியின் பரப்பளவு 257 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்தது. இதே போல வார்டுகளின் எண்ணிக்கையும் 100 ஆக உயர்த்தப்பட்டது.
கோவை மாநகராட்சியின் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை 16 லட்சத்து 17 ஆயிரத்து 111 ஆகவும். 2035–ம் ஆண்டில் கோவை மாநகராட்சியின் மக்கள் தொகை 24 லட்சத்து 87 ஆயிரத்து 500 ஆகவும், 2050–ம் ஆண்டு மக்கள் தொகை 32 லட்சத்து 79 ஆயிரமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
அப்போது அதிகரிக்கும் மக்கள் தொகையின் குடிநீர் தேவையின்படி ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 135 லிட்டர் வீதம் 2035–ம் ஆண்டில் தினமும் 429.75 மில்லியன் லிட்டரும், 2050–ம் ஆண்டில் நாளொன்றுக்கு 565 மில்லியன் லிட்டரும் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது கோவை மாநகராட்சியில் தினமும் 240 மில்லியன் லிட்டர் தண்ணீர் அணைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்காக சிறுவாணி, பில்லூர், ஆகிய அணைகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆழியாறு ஆற்றை ஆதாரமாக கொண்ட குறிச்சி–குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் பவானி ஆற்றை ஆதாரமாக கொண்ட கவுண்டம்பாளையம் –வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களின் வாயிலாக பெறப்படும் உறுதிப்படுத்தப்பட்ட குடிநீரின் அளவை கணக்கில் கொண்டு கோவை மாநகராட்சிக்கு 2035–ம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு 189 மில்லியன் லிட்டரும், 2050–ம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு 325 மில்லியன் லிட்டர் அளவு குடிநீர் கூடுதலாக தேவைப்படுகிறது. கோவை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பவானி ஆற்றை நீராதாரமாக கொண்டு பில்லூர் 3–வது குடிநீர் அபிவிருத்தி திட்டம் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக பவானி ஆற்றில் சமயபுரம் அருகில் அமைந்துள்ள மின்வாரிய மின் உற்பத்தி நிலைய தடுப்பணைகள் அருகில் 21 மீட்டர் விட்டமுள்ள நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்படும். அதிலிருந்து ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர் உந்தப்பட்டு தாசனூர் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட உள்ள நீர்சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நீர் சுத்திகரிக்கப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெரிய இரும்பு குழாய்கள் மூலம் மீண்டும் 9 கிலோ மீட்டர் தூரம் எடுத்து வரப்பட்டு கட்டன்மலை அருகில் புதிதாக கட்டப்பட உள்ள முதலாவது நீர்உந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 73 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியில் நீர் சேகரிக்கப்படும். பின்னர் முதலாவது நீருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள குகை வழியாக கட்டன்மலையை கடந்து ராவுத்தநல்லூரில் புதிதாக கட்டப்பட உள்ள 73 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2–வது நீருந்து நிலையத்தில் சேகரிக்கப்படும்.
2–வது நீருந்து நிலையத்தில் இருந்து 5½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமடை கிராமத்தில் அமைய பெற உள்ள 73 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படும். அப்போது கோவை மாநகராட்சி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 6 மேல்நிலைத் தொட்டிகள் அமைத்து மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப் பட்ட மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ1,018 கோடியாகும்.
இந்த சிறப்பு திட்டத்திற்காக 174 ஏக்கர் நிலம் புறநகரில் கையகப்படுத்தும் பணிகள் வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் முடித்து திட்டத்தை தொடங்கி 2018–ம் ஆண்டின் இறுதிக்குள் முழுவதுமாக முடிக்க திட்டமிடப்பட உள்ளது. இதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகரின் எதிர்கால குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.