பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22–வது மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்ட முடிவில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல கமிட்டியின் அடிப்படையில் 27 சதவீத வேலைவாய்ப்பினை மத்திய அரசு பணிகளில் வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு நிர்வாகத்தில் குறிப்பாக உயர் பதவிகளில் இது அமலாக்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எல்லா பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை எடுக்கும்போது மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு வழங்குவது போல், நிவாரணம் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரத்து 58 விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. அதன்பிறகு நேர்முக தேர்வுக்கு அழைத்த போது போதிய மதிப்பெண் எடுக்காதவர்களுக்கு மதிப்பெண்களை திருத்தி ஒரு முறைகேடு நடந்துள்ளது. இதில் 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதனை பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும்.
இதேபோல் டாக்டர்கள் நியமனத்திற்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படாமலேயே 566 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதிலும் முறைகேடு நடந்துள்ளது. மாநில கவர்னர் விழாவிற்கு செல்லலாம். ஆனால் மாநில அரசு, அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்வதை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
நேற்று முன்தினம் கடலூரில் துறை ரீதி அதிகாரிகள், மாவட்ட கலெக்டரை அழைத்து அரசு நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது என்பதை விசாரித்தார். அந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை. இச்செயலை கண்டிக்கிற போது அ.தி.மு.க. அமைச்சர்கள் வாய்மூடி மவுனம் காப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது மத்திய அரசின் பினாமி அரசு என்பதை நிருபிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.