மருத்துவ மாணவியை கடத்தி, திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி தாக்குதல்


மருத்துவ மாணவியை கடத்தி, திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி தாக்குதல்
x
தினத்தந்தி 17 Dec 2017 5:15 AM IST (Updated: 17 Dec 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மாணவியை காரில் கடத்தி திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி தாக்கியதாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூர்,

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது சார்ஜாவில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இவர் பள்ளிப்படிப்பை சென்னையிலும், என்ஜினீயரிங் படிப்பை ஒரு வருடம் மாங்காட்டில் உள்ள தனியார் கல்லூரியிலும் படித்தார். கடந்த 2 வருடங்களாக சார்ஜாவில் மருத்துவம் படித்து வருகிறார்.

சென்னையில் இருந்தபோது அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த பிரவீண்குமார் (வயது 21) என்பவருடன் முகநூலில் நட்பு ஏற்பட்டு, கடந்த 6 வருடங்களாக அவரை காதலித்து வந்தார். பின்னர் சார்ஜா சென்றதில் இருந்து பிரவீண்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். காதலித்தபோது பிரவீணை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.

இதனால் பிரவீண்குமார் சாந்தியிடம் விரைவில் திருமணம் செய்துகொள்வோம் என தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் இதற்கு சாந்தி சம்மதிக்கவில்லை. கடந்த 14-ந் தேதி சார்ஜாவில் இருந்து சென்னை வந்த சாந்தியை, உன்னுடன் பேச வேண்டும் எனக் கூறி பிரவீண்குமார் தனது கல்லூரி நண்பர் சுரேந்தர் என்பவரின் வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்றார்.

அங்கு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பிரவீண்குமார் வற்புறுத்தினார். உடன் இருந்த அவரது நண்பர் சுரேந்தரும், சாந்தியிடம் நண்பனை ஏமாற்றாதே திருமணம் செய்துகொள் என கட்டாயப்படுத்தினார். அதற்கு சாந்தி, தனக்கு பிரவீணை பிடிக்கவில்லை என்றும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் உறுதியாக கூறிவிட்டார்.

இதனால் கோபம் அடைந்த பிரவீண் சாந்தியை கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சாந்தி அவர்களிடம் இருந்து தப்பிவந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை காரில் கடத்தி திருமணம் செய்ய வற்புறுத்தி தாக்கியதாக பிரவீண் மீதும் அவரது நண்பர் சுரேந்தர் மீதும் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து பிரவீண்குமார், சுரேந்தர் (21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். பிரவீண்குமாரும், சுரேந்தரும் மாங்காட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார்கள். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story