ரோந்துப் பணிக்கு செல்ல பெண் போலீசாருக்கு சைக்கிள் வழங்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்


ரோந்துப் பணிக்கு செல்ல பெண் போலீசாருக்கு சைக்கிள் வழங்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:45 AM IST (Updated: 17 Dec 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

ரோந்துப் பணிக்கு செல்ல பெண் போலீசாருக்கு சைக்கிள் வழங்கவேண்டும் என்று போலீசாரின் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரியாங்குப்பம்,

புதுவையில் அந்தந்த பகுதிகளில் போலீசாரின் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் உத்தரவிட்டார். அதன்படி தெற்கு பகுதி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசாரின் குறைகேட்பு கூட்டம் அரியாங்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

கூட்டத்திற்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், கவுதம் சிவகணேஷ் உள்பட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பெண் காவலர்கள் பகல் நேரத்தில் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். இதை நடைமுறைப்படுத்த பெண் போலீசாருக்கு சைக்கிள் வேண்டும். போலீஸ் நிலையங்களில் வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறை பூர்த்தி செய்ய வேண்டும். பகுதிநேர துப்புரவு பணியார்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் தெரிவித்தார். கூட்டத்தில் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் மற்றும் கரையாம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக நோணாங்குப்பத்தில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது.


Next Story