தட்டாஞ்சாவடி செந்தில் வீட்டு மனைகள் அபகரிக்கப்பட்ட இடத்தில் கிரண்பெடி ஆய்வு
புதுவையில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ள அரசியல்வாதிகளின் பட்டியலை தயாரிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கு கவர்னர் கிரண்பெடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் மாளிகையில் கிரண்பெடியை பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களுடைய புகார்களை மனுவாக அளித்து வருகிறார்கள். அந்த மனுக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவிட்டு வருகிறார்.
குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான புகார் வந்தால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கிரண்பெடி நேரில் சென்று ஆய்வு நடத்தி தேவையான வசதிகளை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் பிரபல ரவுடியான தட்டாஞ்சாவடி செந்தில் விற்பனை செய்த வீட்டு மனைகளில் குடியேறாத வகையில் ஆக்கிரமித்து வைத்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கவர்னர் கிரண்பெடியிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி சென்றார். அவருடன் வீட்டு மனைகள் வாங்கிய உரிமையாளர்களையும் அழைத்துச் சென்றார்.
அப்போது அவர், அங்கு மூடிக்கிடந்த கேட்டை திறந்து மனைகள் வாங்கியவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது அவர் கூறுகையில், ‘இது உங்கள் இடம் நீங்கள் இங்கு இருக்கலாம். உங்களை யார் தடுத்தாலும் புகார் தெரிவியுங்கள். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தட்டாஞ்சாவடி செந்திலால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு மனைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார்கள். அதனால் இன்று (நேற்று) இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன்.
கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை கேட்டுள்ளேன். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களின் தவறுகள் அவர்களது சேவை பதிவு புத்தகத்திலும் பதிவு செய்யப்படும்.
புதுச்சேரியில் ரவுடிகளின் ஆட்சி நடைபெறக்கூடாது. சட்டத்தின், நீதியின் ஆட்சிதான் நடைபெற வேண்டும். ரவுடிகள் இருந்தால் எப்படி புதுவை அமைதியாக இருக்கும்? ரவுடிகள் தொடர்பான புகார்கள் வந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கவர்னர் மாளிகை புகார்களை பெறும் தபால் நிலையம் இல்லை. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நில அபகரிப்பு தொடர்பான புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நில அபகரிப்பு புகார்களில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தபட்டு இருந்தால் அவர்களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். யார் தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ள அரசியல்வாதிகள் பட்டியலையும் தயாரிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.