மண்ணச்சநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


மண்ணச்சநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள கடைவீதி, சமயபுரம் ரோடு, திருப்பைஞ்சீலி ரோடு, எதுமலை ரோடு ஆகிய பகுதிகளில் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றின் முன்பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் பஸ், வேன், கார், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்ரீரங்கம், திருச்சி போன்ற ஊர்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மண்ணச்சநல்லூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின்பேரில் நேற்று மண்ணச்சநல்லூர் தாசில்தார் மகாலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையின் லால்குடி கோட்ட உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் பகுதி செயற்பொறியாளர் விவேகானந்தன் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் காந்தி பூங்காவில் இருந்து கடைவீதி, சமயபுரம் ரோடு, திருப்பைஞ்சீலி செல்லும் ரோடு, எதுமலை ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், கீற்றால் ஆன பந்தல்கள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.

ஒரு சில இடங்களில் சாக்கடை செல்லும் கால்வாய்களுக்கு மேல் போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகளிடம் மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், கலியபெருமாள், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி ஓரத்தில் நட வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story