வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 35). இவர் திருத்தணியை சேர்ந்த சரண்யா (32) என்பவரை கடந்த 1–9–2016 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சரண்யாவின் குடும்பத்தினர் அவருக்கு ரூ. 5 லட்சம் வரதட்சணையும், 43 பவுன் தங்கநகையும், சீர்வரிசை பொருட்களையும் கொடுத்தார்.
பின்னர் இருவரும் கொளத்தூரில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனஞ்செழியன் அவரது தந்தை சுப்பிரமணி, தாயார் சம்பூர்ணம், சகோதரர் தமிழரசு ஆகியோர் சரண்யாவை கூடுதல் வரதட்சணையாக 40 பவுன் தங்கநகை வாங்கி வருமாறு சொல்லி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
மேலும் கருவுற்றிருந்த சரண்யாவையும் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்துவிட்டனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து சரண்யா திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் சரண்யாவின் கணவர், மாமியார், மாமனார் உள்பட 4 பேர் மீது வழககுப்பதிவு செய்தனர்.