செய்தி தரும் சேதி - ஒப்புக்கு உப்பு


செய்தி தரும் சேதி - ஒப்புக்கு உப்பு
x
தினத்தந்தி 17 Dec 2017 11:51 AM IST (Updated: 17 Dec 2017 11:50 AM IST)
t-max-icont-min-icon

ஒப்பற்ற பண்டம் உப்பு என்பதைப் போன்ற பொன்மொழிகள் நம்மிடம் உண்டு. சுவையைச் சேர்க்க உப்பே பிரதானம் என்கிற அடிப்படையில் அவை புழக்கத்தில் இருக்கின்றன.

ப்பற்ற பண்டம் உப்பு என்பதைப் போன்ற பொன்மொழிகள் நம்மிடம் உண்டு. சுவையைச் சேர்க்க உப்பே பிரதானம் என்கிற அடிப்படையில் அவை புழக்கத்தில் இருக்கின்றன. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிருக்கும் பண்டம் நம் தொப்பையிலே’ என்று மக்கள் உப்பைச் சிலாகிப்பது உண்டு. சுவையற்ற செய்தியை உப்புச் சப்பில்லாத செய்தி என்று குறிப்பிடுவார்கள்.

மேற்கத்திய நாடுகளில் உப்பு விலைமதிப்பற்றதாக ஒரு காலத்தில் இருந்தது. அடிமைகளை எடைக்கு எடை உப்பு கொடுத்து வாங்குவார்கள்.

‘அவன் உப்புக்கு பொருத்தமானவன் அல்ல’ (He is not worth his salt) என்ற சொலவடை அப்படித்தான் ஆரம்பமானது.

தமிழில் உப்பு விற்பவர்களை ‘உமணர்’ என்று அழைப்பார்கள். அவர்கள் வண்டிகளில் உப்பை ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்பார்களாம்.

நான் சிறுவனாய் இருக்கும்போது எங்கள் கிராமத்துப் பக்கம் குள்ள மாடு பூட்டிய வண்டியில் கல் உப்பை விற்றுக்கொண்டு சிலர் வருவதையும், படிக்கணக்கில் அவற்றை பாட்டிகள் வாங்கி பத்திரப்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன். பன்னாட்டு நிறுவனங்கள் வந்த பிறகு உப்புக்கும் முத்திரை. சந்தையில் குவித்து வைக்கப்படும் உப்புப் பொதிகள் காணாமல் போய்விட்டன.

உப்புக்கு ருசி இருக்கிறதா, நாக்குக்கு ருசி இருக்கிறதா என்பதைப் பற்றி விவாதிக்கும்போது ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரையை ஆறாம் வகுப்புத் தமிழ் பாடத்தில் படித்தது இன்னும் ஈரமாய் இதயத்தில் இருக்கிறது. ‘உப்பில் ருசியில்லை, நாக்கில்தான் இருக்கிறது’ என்கிற உண்மையை அப்போது நான் அறிந்து கொண்டேன். ருசியை நமக்குப் பெற்றோர் பழக்குகிறார்கள். தொடக்கத்தில் பிடிக்காமல் இருந்தவற்றையும் வளர்ப்பின் காரணமாக வசீகரமானவை என்று நேசிக்கத் தொடங்குகிறோம்.

நாக்கு பழக்கப்படுத்தப்படக் கூடியது. திருவள்ளுவர் கூட ‘உப்பமைந்தற்றால் புலவி’ என்று குறிப்பிடுகிறார். ‘அளவில் கச்சிதமாக இருக்க வேண்டும்’ என்பதற்காக சொல்லப்பட்ட உவமை அது. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று சொல்வது உணவைக் குறிப்பதே தவிர உப்பைக் குறிப்பது அல்ல. ‘உப்பைக் கொடுத்தால் புண்ணியம்’ என நினைத்துக்கொண்டு திருப்பெரும்புதூரில் உள்ள ‘சீட்’ என்கிற ஆயுள் கைதிகளின் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு மாதாமாதம் உப்பு மூட்டை கொடுக்கிற ஒருவரை எனக்குத் தெரியும்.

லாட் என்பவரின் மனைவி சோடம் என்கிற ஊரை திரும்பிப் பார்த்ததால் உப்புத் தூணாய் சபிக்கப்பட்டதாக பைபிளில் உள்ள தோற்றுவாயில் குறிப்பு உள்ளது. காந்தியைப் பற்றி எழுதும்போது கவிக்கோ அப்துல் ரஹ்மான், ‘நீ முத்துக் கல் அல்ல, அனைவர் வீட்டிலும் இருக்கும் உப்புக் கல்’ என்று உப்பின் இன்றியமையாமையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

உப்பு சுவையை மட்டும் சேர்க்கவில்லை. நீடிக்க வைக்கும் பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுகிறது. உப்புக்கண்டம் போடுவது அதற்காகத்தான். மீனைக் கருவாடாக்கி மழைக்காலங்களுக்கு மக்கள் வைத்துக்கொண்டார்கள். மாங்காயை ஊறுகாயாக மாற்றி ஆண்டு முழுவதுக்குமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஊறுகாயைப் பற்றி என்னிடம் சித்த மருத்துவர் சொன்ன செய்தி அதிர்ச்சியை அளித்தது. நாங்கள் தமிழ் வகுப்பில் ஊறுகாயை வினைத்தொகை என்று படித்திருக்கிறோம். மூன்று காலத்திற்கும் பொருந்துவது வினைத்தொகை. ‘ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறப்போகிற காய். எனவே வினைத்தொகை’ என்று ஆசிரியர் சொல்ல, ‘சாப்பிட்டு விட்டால் எப்படி ஊறும்?’ என்று மாணவன் கேட்க, ஆசிரியர் ‘வயிற்றில் ஊறும், உட்கார் அதிகப்பிரசங்கி’ என்று கட்டளை பிறப்பித்ததும் நினைவில் இருக்கிறது. சிலருக்கு ஊறு காயைப் பார்த்தால் வாயில் எச்சில் ஊறுவதால்கூட அதை ஊறுகாய் என்று சொல்லலாம் என நான் விளக்கம் கொடுத்து வாங்கிக்கொண்டதும் நினைவில் இருக்கிறது. அந்த வைத்தியர், ‘அது ஊறு விளைவிக்கும் காய்’ என்று விளக்கம் அளித்தார். அன்றிலிருந்து நான் ஊறுகாயைத் தொடுவதில்லை. ஸ்பூனில் வாயில் போட்டுக்கொள்கிறேன்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்குக்கூட உப்பில் நாட்டம் உண்டு. சரணாலயங்களில் ஓடைகளில் உப்புக்கட்டிகளை வன அலுவலர்கள் வைப்பது உண்டு. ஆனால் வளர்க்கிற நாய்களுக்கு உப்புப் போட்டு சமைக்க மாட்டார்கள். சொறி வந்துவிடுமாம்.

எனக்குத் தெரிந்த ஒருவர் சமைத்த உணவில் உப்பை அறவே தவிர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். அவருடைய வீட்டிற்குச் சென்றபோது அவர் செய்கைகள் பிறழ்ந்ததைக் கண்டு குழம்பினேன். வெளியில் வந்ததும் அவர் மகன் ஓடிவந்து கைகளைப் பிடித்துக்கொண்டு உப்பு சாப்பிடாததால் இப்படி சிக்கல்கள் ஏற்பட்டு விட்டன என்று வருத்தம் தெரிவித்தார். இயற்கை உணவை உண்பவர்களுக்கு தேவையான உப்பு தகுந்த வடிவத்தில் சென்று விடுவதால் இந்தப் பிரச்சினை இல்லையோ என்று நினைத்தேன்.

உப்பு பற்றிய வழிபாட்டுச் செய்தியும் நம்மிடம் புழக்கத்தில் உண்டு. கும்பகோணத்திற்கு அருகில் உப்பிலியப்பர் கோவில் இருக்கிறது. இது ஒப்பிலியப்பன் என்றிருந்து உப்பிலியப்பனாக மருவியது. பூமாதேவியை திருமால் திருமணம் செய்துகொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்று ஆகிவிட்டது. இன்றும் உப்பில்லாத திருவமுதை நிவேதனம் செய்கின்றனர். அந்த வளாகத்தில் உப்பில்லாத பண்டத்தைச் சாப்பிட்டாலும் வித்தியாசம் தெரியாது என்கிற நம்பிக்கையும் உண்டு.

உப்பின் மீது மனிதனுக்கு ஏற்பட்ட அதீத ஈர்ப்புக்கு உடலியல் ரீதியான காரணங்களும் உண்டு. உயிர் ஆதியில் கடலில் தோன்றியதால் இந்தத் தொடர்பு. நம் வியர்வையும், கண்ணீரும், சிறுநீரும் உப்புச் சுவையுடன் அமைந்திருக்கின்றன.

உப்பு கிடைக்க இரண்டு மூலங்கள் உள்ளன. கடல் உப்பு, பாறை உப்பு. கடல் உப்பைவிட பாறை உப்பு நல்லது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. உயிரற்ற கடலில் (Dead sea) எந்த உயிரினமும் வாழ முடியாது. மற்ற கடல்களில் உப்பின் விகிதம் 3.5 சதவீதம். உயிரற்ற கடலிலோ 33.7 சதவீதம். அந்தக் கடலில் யாரும் நீந்தவும் முடியாது, மூழ்கவும் முடியாது. வருகிற தண்ணீர் வடிய வாய்ப்பில்லாததால் உப்பு சேர்ந்து இத்தகைய நிலை. சிலருடைய செல்வமும் அப்படித்தான் உயிரற்ற கடலாய் இருக்கிறது. மற்றவர்களிடம் பழக மனமில்லாதவர்களும் உயிரற்றவர்களாகவே இருப்பார்கள்.

‘உப்பு வேலி’ என்கிற அற்புதமான புத்தகம். ராய் மாக்சம் எழுதியது. இங்கிலாந்து இந்தியாவை பொருளாதாரரீதியாகச் சுரண்டி ஆதிக்கம் பெற உப்பை முக்கியப் பொருளாகக் கருதியது. கிழக்கிந்தியக் கம்பெனி சிந்து மாநிலத்திலிருந்து ஒடிசா மாநிலம் வரை வடகிழக்கு இந்தியாவில் 2504 மைல் தூர அளவில் புதர் வேலி ஒன்றை எழுப்பியது. அதை அமைக்கும் பணி 1803-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14 ஆயிரம் ஊழியர்கள் காவல் காத்தனர். அந்த எல்லைக்குள் உப்பைப் பதுக்கி வைத்து, பாதுகாத்து, விற்பனை வரி விதித்து ஏராளமான பணத்தைச் சுரண்டியது. அதிக விலை இருந்த காரணத்தால் பொது மக்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் அவதிப்பட்டதாகவும், பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டதாகவும் அந்தப் புத்தகம் விவரிக்கிறது.

ராய் மாக்சம் அதைப்பற்றி கேள்விப்பட்டு சுவடு தெரியாமல் போய்விட்ட அந்த வேலியை தேடும் பெரும் பிரயாசையுடன் பயணம் செய்து இந்த நூலை வெளியிட்டார். இந்தியாவில் இந்தியர்களைப்போலப் பயணம் செய்து அவர் சேகரித்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.

உப்பு அனைவரையும் இணைக்கிற பாலம் என்பதால் எந்த உப்பு நம்மை அடிமைப்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததோ அதே உப்பு நாம் விடுதலை பெறுவதற்கும் கடக்கால் போட்டது. காந்தியடிகள் மக்களை இணைக்க உப்பைக் கையிலெடுத்தார். அவர் கைத்தடியோடு கைப்பிடி அளவு உப்பெடுப்பதை பெரிய போராட்டமாக இர்வின் கருதவில்லை. ஆனால் அவர் அதை புனிதப் பயணமாக மாற்றினார். அதில் இணைவதை யாத்திரையாகக் கருதி மக்கள் சேர்ந்து கொண்டனர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பல தியாகிகள் முன்னின்று அந்த சத்தியாகிரகத்தை நடத்தினர். அனை வரையும் ஈடுபடுத்தினால் சின்ன முயற்சியாகத் தோன்றும் செயல் பெரிய போராட்டமாகக் கிளர்ந்தெழக்கூடும் என்பதற்கு உப்பு சத்தியாகிரகம் உன்னதமான எடுத்துக்காட்டு. அகிம்சை வழியில் போராடுகிற பல தலைவர்களுக்கு அது வழிகாட்டிக் கையேடாக வரலாற்றால் வாழ்த்தப்பட்டது.

இப்போது உப்பு தேவையேயில்லை என்று ஆய்வு முடிவு ஒன்று அறிவித்திருக்கிறது. கிரகம் மெக்ரகர் என்கிற உப்பு குறித்த உலகச் செயல்பாடு நிறுவனத்தின் (World Action on Salt) தலைவர். உப்பைத் தவிர்த்தால் மனிதர்கள் சிம்பன் சிகள், கொரில்லாக்களைப்போல ரத்தக்கொதிப்பில்லாமல் வாழலாம் என்று கூறுகிறார். பரிணாம வளர்ச்சியின்போது மனிதர்கள் ஒரு நாளைக்கு அரை கிராமுக்கும் குறைவாக உப்பை உண்டனர். இப்போது அதன் அளவு 12 கிராமாக உயர்ந்திருக்கிறது. முதலில் அனைத்திலும் உப்பைக் குறைப்பது, பிறகு உப்பில்லாமல் சிலவற்றை உண்பது என பழக்கப் படுத்தினால் உடலை மேம்படுத்தலாம். பாதுகாக்கப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பதும் உப்பைக் குறைக்க உதவும்.

‘உப்புக் குறைவான பண்டம் தொப்பையில் சென்றால் விரைவில் நாம் குப்பையில் விழாமல் காப்பாற்றப்படுவோம்’ என்பதே இச்செய்தி தரும் சேதி.

(செய்தி தொடரும்)

Next Story