20 அடி நீள கரும்பு.. 100 டன் மகசூல்!


20 அடி நீள கரும்பு.. 100 டன் மகசூல்!
x
தினத்தந்தி 17 Dec 2017 12:46 PM IST (Updated: 17 Dec 2017 12:46 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிரா மாநில விவசாயி ஒருவர் 20 அடி உயர நீளத்தில் கரும்புகள் வளர்த்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

காராஷ்டிரா மாநில விவசாயி ஒருவர் 20 அடி உயர நீளத்தில் கரும்புகள் வளர்த்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ஒரு ஏக்கர் நிலத்தில் 100 டன் கரும்புகளை விளைவித்தும் அசத்தி இருக்கிறார். அவருடைய பெயர் சுரேஷ் கபாடே. அங்குள்ள சங்குலி மாவட்டத்தில் உள்ள கரன்ட்வாடி கிராமத்தை சேர்ந்தவர். இவர்களுடைய குடும்பத்தினர் தங்களுடைய பூர்வீக நிலமான 30 ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்வதையே, வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சுரேஷ் கபாடேயின் தந்தை, அப்பாஷோ கபாடேவுக்கு 30 முதல் 35 டன் கரும்புகளாவது ஒரு ஏக்கர் நிலத்தில் அறுவடையாக வேண்டும் என்பது நெடுநாள் கனவாக இருந்திருக்கிறது. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த மகசூலோ, லாபமோ கிடைக்கவில்லை. தந்தையின் கனவை நனவாக்கி, கரும்பு சாகுபடியில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற முனைப்போடு சுரேஷ் கபாடே களப்பணியாற்றி இருக்கிறார். வழக்கமான கரும்பு சாகுபடி முறையில் மாற்றங்களை செய்து, கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய முயற்சி வீண் போகவில்லை. தந்தையின் எதிர்பார்ப்பை விட 100 டன்னுக்கும் அதிகமாக கரும்பு சாகுபடி செய்து அசத்தி விட்டார். ஒவ்வொரு கரும்பும் 20 அடி நீளத்திற்கு வளர்ந்து, மற்ற கரும்பு விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. ஒரு கரும்பு மட்டுமே சுமார் 4 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

சுரேஷ் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். குடும்பத்தினர் படிப்பை தொடருமாறு கட்டாயப்படுத்தியும், விவசாயம் மீது இருந்த ஆர்வத்தில் படிப்பை தொடராமல் இருந்திருக்கிறார்.

‘‘என் உடன் பிறந்தவர்கள் நன்கு படித்தவர்கள். நான் படிப்பை நிறுத்தியதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் எனக்கு விவசாயம்தான் பிடித்திருந்தது. தந்தையின் கனவான 100 டன் கரும்புகளை எப்படியாவது விளைவித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனை நிறைவேற்றி இருப்பது மன நிறைவை தருகிறது’’ என்கிறார்.

சுரேஷ் கரும்பு விளைச்சலை அதிகப் படுத்துவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி பெற்றிருக்கிறார். அப்போது பேராசிரியர் அபாசாகேப் என்பவர் கொடுத்த ஆலோசனை பலன்கொடுத்திருக்கிறது.

‘‘பேராசிரியர் எங்களுடைய கரும்பு சாகுபடி நிலத்தை பார்வையிட்டு சில பரிசோதனைகள் செய்தார். அவருடைய ஆலோசனையை கேட்டு நடவு முறையிலும், உரங்களை பயன்படுத்தும் விதத்திலும் மாற்றங்கள் செய்தோம். பாரம்பரிய கரும்பு நடும் முறையில் 2.5 அடி தூரம் இடைவெளி விட்டு சாகுபடி செய்வார்கள். ஆனால் நாங்கள் 5 முதல் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நடவு செய்தோம். விதைகள் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தினோம். வீரியமிக்க விதைகளை வாங்கி அவைகளை நேரடியாக மண்ணில் ஊன்றால் பதப் படுத்தி விதைத்தோம். நீர் பாய்ச்சுவதிலும் வடிகால் முறையில் மாற்றங்கள் செய்தோம். என்னுடைய ஆறு ஆண்டு போராட்டத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது’’ என்கிறார்.

சுரேஷ் இந்த ஆண்டு முதல் பருவ சாகுபடியில் ரூ. 40 லட்சம் லாபம் ஈட்டியதுடன் இரண்டாவது பருவத்தில் ஒரு ஏக்கருக்கு 120 டன் கரும்பு விளைச்சல் பெறுவதற்கு திட்டமிட்டுவிட்டார். சுரேஷின் கரும்பு சாகுபடிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் விருது வழங்கியும் கவுரவித்து இருக்கின்றன.

‘‘கல்வியை முழுமையாக முடிக்கவில்லை என்ற வருத்தம் என்னிடம் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகாரிகள், விவசாய விஞ்ஞானிகள் என்னிடம் கரும்பு விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான நுட்பத்தை கற்க ஆவலோடு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வி மிக முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை. என் பிள்ளைகளை நன்றாக படிக்கவேண்டும் என்று ஊக்கப் படுத்துகிறேன்’’ என்கிறார் சுரேஷ்.

Next Story