பாடம் நடத்துகிறார்கள்.. பலவற்றையும் கற்கிறார்கள்..


பாடம் நடத்துகிறார்கள்.. பலவற்றையும் கற்கிறார்கள்..
x
தினத்தந்தி 17 Dec 2017 1:41 PM IST (Updated: 17 Dec 2017 1:41 PM IST)
t-max-icont-min-icon

‘வெளிநாட்டு பெண்கள் இருவர் இங்கு வந்து கிராமத்தில் தங்கி சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்ற தகவல் காதுகளில் விழுந்த சில மணி நேரத்தில் அங்கு சென்ற நம்மை அந்த கிராமத்து சூழல் ரொம்பவே கவர்ந்தது.

‘வெளிநாட்டு பெண்கள் இருவர் இங்கு வந்து கிராமத்தில் தங்கி சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்ற தகவல் காதுகளில் விழுந்த சில மணி நேரத்தில் அங்கு சென்ற நம்மை அந்த கிராமத்து சூழல் ரொம்பவே கவர்ந்தது. அந்த கிராமத்தின் பெயர் கசுவா! சென்னையை அடுத்த திருநின்றவூரைத் தாண்டி 7 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள ஏழை மாணவ- மாணவி களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள், வெளிநாட்டு பெண்கள் இருவரும். ஒருவர் பெயர் க்ளோவி எலிசபெத், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமை சேர்ந்தவர். இன்னொருவர் ஹன்னா ராஸ், ஸ்காட்லாந்தை சேர்ந்தவர்.

இருவரும் பள்ளி இறுதி ஆண்டு கல்வியை பூர்த்தி செய்துவிட்டு, கல்லூரி படிப்பில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பு கிடைத்திருக்கும் ஓராண்டு விடுமுறையை இந்தியாவில் கழித்து, இங்குள்ள கிராமத்து குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறார்கள். அவர்களோடு இங்குள்ள குழந்தைகள் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். ‘சிஸ்டர் நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டீங்களா?’ என்று நலம் விசாரித்து அன்பைப் பொழிகிறார்கள். ஆங்கில கல்வியை அவர்களுக்கு உரைநடை வாயிலாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

க்ளோவி கண் அசைவிலேயே மாணவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார். அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக நடத்திய பாடத்தில் இருந்து திரும்பத் திரும்ப கேள்விகளை எழுப்புகிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் உற்சாகமாக பதில் அளிக்கிறார்கள். கரும்பலகையில் கேள்விகளை எழுதிப் போடுகிறார். அதற்கு விரைவாக நோட்டில் பதில் எழுதிக் காட்டுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்விக்கிறார். அதனால் மாணவர்கள் போட்டி போட்டு பாடங்களை படிக்கிறார்கள்.

‘‘எனக்கு இந்த மாணவர்கள் மூலம் வித்தியாசமான அனுபவம் கிடைத் திருக்கிறது. நான் இங்கு வந்த புதிதில் இந்த சிறுவர், சிறுமியர்கள் எல்லாம் என்னோடு மிகுந்த உற்சாகத்தோடு பழகினார்கள். நான் ஆசிரியராக பாடம் சொல்லி கொடுக்கத் தொடங்கியபோதும் விளையாட்டு மனநிலையிலே இருந்தார்கள். என்னை பார்த்து புன்னகைத்தபடி, அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கவனத்தை என் மீது திருப்ப கேள்வி கேட்டு பாடம் நடத்தி பரிசு வழங்கினேன். என்னிடம் பரிசு பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் பாடங்களை ஒழுங்காக படிக்கிறார்கள்” என்றார், க்ளோவி.

ஹன்னா பாடம் நடத்தும் விதமும் மாணவர்களை குஷிப்படுத்துகிறது. தன்னுடைய கைகளில் அணிந்திருக்கும் வளையல்களை வைத்தே ஒருமை, பன்மைக்குரிய வித்தியாசங்களை வகைப்படுத்துகிறார். ஆங்கில இலக்கணத்தையும் மிக எளிமையாக கற்றுக்கொடுக்கிறார். சிரித்து, ரசித்தபடி அவர் கற்றுக்கொடுப்பது குழந்தைகளை வெகுவாக கவரவே செய்கிறது.

ஹன்னா, க்ளோவி இருவருக்கும் 18 வயதாகிறது. இவர்கள் அடிப் படைக் கல்வியோடு, தொழில்முறை கல்வியும் கற்றிருக்கிறார்கள். அது தங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறுகிறார்கள். இருநாட்டு கற்றல் முறைகள் குறித்தும், இங்குள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அனுபவம் குறித்தும் அவர்களிடம் கேட்டோம்!

‘‘எங்கள் நாட்டுப் பாடத்திட்டங்கள் போன்று இங்குள்ள பாடத்திட்டங்களிலும் வரலாற்று பின்னணியை அடிப் படையாக கொண்ட தகவல்கள் அதிகம் இடம்பிடித்துள்ளன. ஆனால் அறிவியல், கணக்கு பாடங்களை ஒப்பிடும்போது இங்குள்ள பாடத்திட்டங்கள் கடினமாக இருக்கிறது. எங்களுடைய தினசரி வகுப்பு கால அட்ட வணையில் கைவினை பயிற்சி, தகவல்தொழில்நுட்ப பயிற்சி போன்றவை நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அந்த பயிற்சி வகுப்புகளில் தினமும் கட்டாயம் பங்கு பெற வேண்டும். ஆனால் இங்கு வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள்தான் அத்தகைய வகுப்புகள் இருக்கின்றன.

நாங்கள் பள்ளி படிப்பு படிக்கிற காலத்திலேயே எங்களுக்கு பிடித்தமான தொழில் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்து படிப்பதால் பின்னாளில் எந்த துறைக்குள் நுழையப் போகிறோம் என்பதை முதலிலே முடிவு செய்துவிடுகிறோம். மேலும் நடனம், இசை, ஓவியம், அனிமேஷன் போன்றவற்றை கற்றுக்கொண்டு எங்கள் தனித்திறன்களை வளர்த்து கொள்கிறோம். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கரும்பலகையும், சாக்பீசும் புதுமையான விஷயமாக எங்களுக்குத் தோன்றுகிறது. அங்கு நாங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடி, செய்முறை மூலம் பாடங்களை கற்றுக்கொள்வோம். கணினி மூலமாகவும் பாடங்களை பயில்வோம். இங்கு மாணவர்களிடம் புத்தகங்களை பார்த்து சத்தமாக பேசி பாடங்களை சொல்லிக்கொடுத்து, கரும்பலகையில் எழுத வேண்டியிருக்கிறது. சத்தமாக பேசுவதால் தொண்டை வலி ஏற்படுகிறது. ஆனாலும் மாணவர்களுடன் அப்படி பேசுவது பிடித்திருக்கிறது’’ என்கிறார்கள்.

வெளிநாட்டு மாணவிகள் பாடம் நடத்திய பள்ளி சேவாலயா அறக்கட்டளை சார்பில் இயங்குகிறது. ஏழை மாணவ- மாணவிகளுக்காகவே இயங்கும் இந்த பள்ளியில் இலவசமாக கல்வி போதிக்கப்படுகிறது. பள்ளியின் வளாகத்தில் முதியோர் இல்லம், இயற்கை விவசாய பண்ணை மற்றும் கோசாலையும் இயங்கி வருகிறது. விவசாய பண்ணையில் இயற்கை சாகுபடி மூலம் வெண்டை, வெள்ளரி, வெங்காயம், கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய், கீரை வகைகளை விளைவிக்கிறார்கள். அவை விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. அங்கு பயிரிடப்பட்டிருக்கும் செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்.

ஹன்னா, க்ளோவி இருவரும் விவசாயத்திலும் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள். சொட்டு நீர் பாசன கருவிகளில் உள்ள நுண் துளைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்தனர். அங்கு வேலை பார்க்கும் விவசாய தொழிலாளர்களுடன் சேர்ந்து களை பறித்தல், விளைந்த பயிர்களை அறுவடை செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறார்கள். ஏர் உழுவது அவர்களை ரொம்பவே ஈர்த்திருக்கிறது. விவசாய பணிகளுக்காக தொழிலாளர்கள் ஏர் உழுதுகொண்டிருக்க, அதை பார்த்தபடி தங்களுக்கும் அதை செய்ய ஆசை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களது ஆசையை விவசாய தொழிலாளர்கள் நிறைவேற்றி வைத்தார்கள். அவர்களும் ரசித்து ஏர் பிடித்து உழுதார்கள்.

தனது விவசாய அனுபவம் பற்றி ஹன்னா சொல்கிறார்:

‘‘நான் என்னுடைய நண்பனின் தோட்டத்திற்கு சென்று விவசாய வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். ஸ்காட்லாந்தில் கோதுமை, கேரட், உருளைக்கிழங்கு, காலிபிளவர், பீன்ஸ் போன்றவைதான் அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்கு ஒரே பயிரை மீண்டும் மீண்டும் பயிரிடாமல் மாற்றுப்பயிர்களை அதிக அளவில் நடவு செய்கிறார்கள். இயற்கை விவசாயம் மூலம் பயிரிடும் காய்கறிகளின் விலை அதிகம் என்பதால் அதனை வாங்குவதற்கு மக்கள் தயங்குகிறார்கள். எங்கள் நாட்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இது உலகளாவிய பிரச்சினை. அதற்கு தீர்வு காண இயற்கை வேளாண் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

ஹன்னா, க்ளோவி இருவரும் இந்திய கலாசாரத்தை மனப்பூர்வமாக பின்பற்றுகிறார்கள். வளையல், கொலுசு, தோடு, ஜிமிக்கி, நகை, பொட்டு போன்றவற்றை விரும்பி பயன்படுத்தி தமிழ் பெண்களாகவே மாறிவிட்டார்கள். சுடிதார்கள், விதவிதமான புடவை ரகங்களை உடுத்தியும் மகிழ்கிறார்கள்.

‘‘பேண்ட்-டிசர்ட்தான் எங்களுக்கு பிடித்தமான உடைகள். எப்போதாவது ஸ்கர்ட், சர்வார்கமீஸ் உடுத்துவோம். கைகளில் வாட்சும், பிரெஸ்லெட்டும் அணிந்துகொள்வதுண்டு. காதுகளில் கட்டாயம் தோடு அணிவோம். சில சமயங்களில் செயின், மோதிரம் போட்டுக்கொள்வோம். இங்குள்ள பெண்கள் அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது அவர்களை மேலும் அழகாக்குகிறது. இங்கு வேலை பார்க்கும் ஆசிரியைகளை பார்த்ததும் எங்களுக்கும் அதுபோன்ற ஆபரணங்களை அணியும் ஆவல் உருவானது. கை, கால், விரல், கழுத்து, காதுகளுக்கு ஆபரணங்கள் அணிந்து மகிழ்கிறோம். இந்த ஆபரணங்கள் எங்களை கூடுதல் அழகாக்குகிறது. முதலில் புடவையை உடுத்துவதற்கு சிரமமாக இருந்தது. இப்போது நாங்களாகவே உடுத்திக்கொள்ள பழகிவிட்டோம். எங்களை பொறுத்தவரையில் புடவை கட்டிக்கொள்வது எளிதுதான்..’’ என்று மனம் பூரிக்கிறார்கள்.

தமிழ் மொழியையும் இருவரும் ஆர்வமாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் எழுத்துக்களை தெளிவாக உச்சரிக் கிறார்கள். மனித உடல் உறுப்புகள் பற்றி தமிழில் அழகாக சொல்கிறார்கள். அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை இங்கு தங்கி இருந்து சேவையாற்ற திட்டமிட்டுள்ளார்கள். அதற்குள் தமிழ் மொழியை முழுமையாக கற்று சரளமாக உரையாடிவிடுவோம் என்ற நம்பிக்கை அவர்களுடைய பேச்சில் வெளிப்படுகிறது. இங்குள்ள கோசாலையில் வளர்க்கப்படும் மாடுகள் இருவருக்கும் செல்லப்பிராணிகளாகிவிட்டன. அவைகளின் தீவனத்திற்காக வளர்க்கப்படும் புற்களை அறுவடை செய்து, சுமந்து வந்து மாடுகளுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள். மாடுகளின் கோமியத்தில் இருந்து பஞ்சகவ்யம் தயாரிப்பது பற்றியும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர் களையும் அன்பால் வசப்படுத்திவிட்டார்கள். இரவில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு பாட்டு, நடனம், இசை கற்றுக்கொடுத்தும் அவர்களை ஆனந்தப்படுத்துகிறார்கள். ‘வாழ்க்கை மிக குறுகியது. அதனை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். தம்மால் முயன்ற அளவு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்பது இவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.

Next Story