கோவில்பட்டியில், தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு


கோவில்பட்டியில், தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2017 3:45 AM IST (Updated: 18 Dec 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 11 பவுன் சங்கிலியை பறித்ததுடன், மற்றொரு பெண்ணிடமும் நகையை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு அதே தெருவில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்கள் விஜயலட்சுமி மீது மோதுவது போல் சென்றதால், அவர் நிலை தடுமாறினார். இதனை பயன்படுத்தி கொண்ட அந்த வாலிபர்கள், அவருடைய கழுத்தில் கிடந்த 11 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயலட்சுமி கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

மற்றொரு பெண்ணிடம்...

அதே போல், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த காமராஜ் (45) என்பவரின் மனைவி பெர்லினா (42), அதே தெருவில் உள்ள தனது கணவரின் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர், பெர்லினா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாரித்து கொண்ட பெர்லினா தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டு கூச்சல் போட்டார். இதனால் அந்த வாலிபர்கள், நகை பறிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்த பெர்லினா கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கும்பல் கைவரிசை?

இதற்கிடையில், இந்த 2 சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கோவில்பட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திர வடிவேல் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில்,‘ ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்களில் ஒரே கும்பலை சேர்ந்த 2 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சங்கிலி பறிப்பு சம்பவங்கள் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story