பிரதமர், முதல்–மந்திரி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க சட்டம் வேண்டும்
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘சாம்னா’வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவுத் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:–
மும்பை,
குஜராத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இதற்கு காரணம் அவர் பிரசாரம் என்ற சேற்றில் தானாக முன்வந்து குதித்ததுதான். இதை உடனடியாக நிறுத்தியாகவேண்டும். எனவே பிரதமர் மற்றும் முதல்–மந்திரி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க புதிய சட்டத்தை இயற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பிரதமரும், முதல்–மந்திரியும் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்வதால் அரசு பணம் வீணடிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் 40 முதல் 45 பிரசார பொதுகூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக அரசு விமானமும், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் தண்ணீராக செலவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக மத்திய அரசு ஒரு தேர்தல் தொழிற்சாலையாக மாறிவிட்டது.
இவை அனைத்தையும் தடுக்க ஒரே வழி பாராளுமன்ற தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் ஒரே வேளையில் நடத்துவதுதான். அப்படி இல்லை என்றால் பிரதமரையும், முதல்–மந்திரிகளையும் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்த வேண்டும். அப்படியும் இல்லை என்றால் தங்கள் கட்சிகாக பிரசார கூட்டத்திற்கு செல்லவிரும்பும் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.