திருப்பூர் நல்லாற்றின் கரையோரம் குடியிருப்பவர்கள் மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா


திருப்பூர் நல்லாற்றின் கரையோரம் குடியிருப்பவர்கள் மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நல்லாற்றின் கரையோரம் குடியிருப்பவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 29–வது வார்டு, 30–வது வார்டு பகுதியை சேர்ந்த பூம்பாறை பகுதி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

நல்லாற்றின் கரையோரம் எந்த இடையூறும் இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி தொட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டு இருந்தபோது நாங்கள் வரி செலுத்தி வந்தோம். எங்களுக்கு அரசு சார்பில் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு வரி செலுத்தினோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆதி திராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம் வசிக்கிறோம்.

கடந்த சில நாட்களாக நொய்யல் ஆறு, நல்லாறு கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். பொதுப்பணித்துறை சார்பில் உடனடியாக காலி செய்யுமாறு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கூறினார்கள். மேலும் இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ம.தி.மு.க. திருப்பூர் மாநகர பொருளாளர் மணி, எம்.எல்.எப். சார்பில் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், திருப்பூர் மாநகராட்சியின் 23–வது வார்டு கோல்டன் நகருக்கும், 32–வது வார்டு மூகாம்பிகை நகருக்கும் மத்தியில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் தொட்டிய மண்ணரை எம்.எஸ்.ஆர்.நகர், கோல்டன் நகரில் வசிக்கும் பள்ளி மாணவ–மாணவிகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதமாக பாலத்தின் அடியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை தொடர்கிறது. அங்கு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றியும், கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஊத்துக்குளி ஒன்றியம் முத்தம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 15 வீடுகள் உள்ளன. கடந்த 2009–ம் ஆண்டு அவரவர் விலை கொடுத்து நிலத்தை வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இதுவரை எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வழிப்பாதை பிரச்சினை இருப்பதால் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் சின்னசாமி லே–அவுட் பகுதியை சேர்ந்த கமலாத்தாள்(வயது 61) என்ற மூதாட்டி பட்டா தொடர்பாக மனு கொடுத்து விட்டு வெளியே வந்தார். அப்போது திடீர் மயக்கம் ஏற்பட்டு அவர் சரிந்தார். அருகில் இருந்த பெண்கள் கமலாத்தாளை தாங்கிப்பிடித்துக்கொண்டனர். அவரை அப்படியே தரையில் அமர வைத்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 108 ஆம்புலன்சில் இருந்து ஊழியர் விரைந்து வந்து கமலாத்தாளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். சிறிது நேரம் கழித்து கமலாத்தாள் அங்கிருந்து சென்றார்.


Next Story