கலெக்டர் அலுவலகத்தில் வெங்கத்தூர் ஊராட்சி பொதுமக்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தில் வெங்கத்தூர் ஊராட்சி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Dec 2017 4:15 AM IST (Updated: 19 Dec 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் வெங்கத்தூர் ஊராட்சி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில் 20–க்கும் மேற்பட்ட நகர் பிரிவுகள் உள்ளன.

இந்தநிலையில் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வெங்கத்தூர் ஊராட்சியை சேர்ந்த வியாபாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்தூரை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று வெங்கத்தூர் ஊராட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 300–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

அப்போது வெங்கத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது. வெங்கத்தூர் கன்னியம்மன் நகரில் பள்ளி அருகே குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். வெங்கத்தூரில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் வழங்கினர்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் ஊராட்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘பழையனூர் எல்லையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ள இந்த மதுக்கடையால் பள்ளி, கல்லூரி மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பெண்கள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்’’ என்றனர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story