கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தி: விவசாயி தீக்குளிக்க முயற்சி


கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தி: விவசாயி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Dec 2017 4:15 AM IST (Updated: 19 Dec 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கோரிக்கை மனு அளிப்பதற்காக திருவாரூரை அடுத்த ஒவலிக்குடி வடக்குத்தெருவை சேர்ந்த விவசாயி சாமிநாதன் (வயது70) என்பவர் வந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கம் முன்பு வந்த அவர் மறைத்து கொண்டு வந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அப்போது மயங்கி விழுந்த அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மீட்டு, அலுவலகத்தின் பின் பகுதிக்கு அழைத்து சென்றனர். மண்எண்ணெய்யை ஊற்றியதால் உடலில் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக கதறி துடித்த அவர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி, ஆறுதல் கூறினர். பின்னர் அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

நிலம் அபகரிக்க முயற்சி

தீக்குளிக்க முயன்ற தற்காக காரணம் குறித்து சாமிநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாமிநாதனின் நிலத்தை அவருடைய உறவினர்கள் சிலர் அபகரிக்க முயன்றதும், இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்த பின்னரும் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக அவர் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story