குஜராத்தில் 2 தேசிய கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு குமாரசாமி சொல்கிறார்


குஜராத்தில் 2 தேசிய கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 19 Dec 2017 3:30 AM IST (Updated: 19 Dec 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும், குஜராத்தில் 2 தேசிய கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக குஜராத் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து இருந்தது. இந்த முடிவுகளை பார்க்கும்போது குஜராத்தில் 2 தேசிய கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 2 கட்சிகளுமே ஏமாற்றம் அடைந்துள்ளன.

கடுமையாக போராடினார்

நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநில சட்டசபை தேர்தலில் பிரதமர் 15 நாட்கள் தங்கி இருந்து 70 பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். மக்களின் நம்பிக்கையை பெற அவர் கடுமையாக போராடினார். நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

குஜராத்தில் 3 இளைஞர்கள் பொங்கி எழுந்து பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்தனர். அவர்களின் பயனை காங்கிரஸ் பெற்றது. அதனால் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆயினும் அந்த கட்சியால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. காங்கிரஸ் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

ஒன்றும் செய்யவில்லை

குஜராத்தில் ஆதிவாசிகள் இதுவரை காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டு வந்தனர். இந்த தேர்தலில் அவர்களின் ஓட்டுகளும் பா.ஜனதாவுக்கு சென்றுள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தனது அடிப்படை ஓட்டுகளையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தில் ஏதாவது ஒரு மாநில கட்சி இருந்திருந்தால் அதற்கு மக்கள் வாக்களித்து இருப்பார்கள்.

அதனால் 2 தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத 6 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சனம் செய்து கொள்கிறார்கள். சித்தராமையா வெறும் விளம்பரங்கள் மூலம் சாதனைகள் செய்ததாக வெளிப்படுத்துகிறார். ஆனால் இந்த அரசு களத்தில் ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 

Next Story