தற்கொலை செய்த கொத்தனார் உடலை வாங்க யாரும் வரவில்லை


தற்கொலை செய்த கொத்தனார் உடலை வாங்க யாரும் வரவில்லை
x
தினத்தந்தி 20 Dec 2017 4:15 AM IST (Updated: 20 Dec 2017 12:06 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் குடும்பத் தகராறில் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க யாரும் வராததால் 5 நாட்களாக ஆஸ்பத்திரியில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பு 14-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பாபு (வயது 45). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (42). இவர்களுக்கு திவ்யா (17), பிரியா (9) என 2 மகள்கள் உள்ளனர்.

பாபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பாபு, தனது மனைவி குடியிருந்து வரும் அதே குடியிருப்பை சேர்ந்த 106-வது பிளாக்கில் உள்ள வீட்டிற்கு சென்றார். பின்னர் திடீரென தனது உடலில் பாபு தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த பாபுவை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அன்று இரவே இறந்து போனார். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பாபுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராததால் ஆஸ்பத்திரியிலேயே கடந்த 5 நாட்களாக உடல் வைக்கப்பட்டு உள்ளது.

Next Story