மின் கம்பி மீது லாரி உரசி தீப்பிடித்தது ரூ.1 லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசம்


மின் கம்பி மீது லாரி உரசி தீப்பிடித்தது ரூ.1 லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே, மின் கம்பி மீது லாரி உரசியதில் தீப்பிடித்து ரூ.1 லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசமானது.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 42). இவர் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நாரை கட்டி, தனக்கு சொந்தமான டிப்பர் லாரியில் ஏற்றி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்திற்கு விற்பனைக்காக நேற்று மாலை கொண்டு சென்று கொண்டிருந்தார். லாரியை அவரே ஓட்டிச்சென்றார்.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னமல்லப்பாடி அருகே சென்றபோது சாலையின் ஓரம் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி மீது லாரி உரசியது. இதனால் லாரியில் இருந்த தென்னை நார் தீப்பற்றி எரிந்தது. இதை கவனிக்காத கோவிந்தன் தொடர்ந்து லாரியை ஓட்டி சென்றார். அதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனை கவனித்த கோவிந்தன் லாரியை நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்த தென்னை நார்கள் எரிந்து கொண்டிருந்தது. உடனே லாரியில் இருந்த தென்னை நார்களை கீழே கொட்டினார்.

இதுகுறித்து பொதுமக்கள் பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான நார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக லாரி, தீ விபத்தில் இருந்து தப்பியது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story