மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 25-ந்தேதி மறியல் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 25-ந்தேதி மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 25-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி கூறினார்.

தர்மபுரி,

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு முழுவதும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு காரணமாக தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளன. திருப்பூரில் பனியன் தயாரிப்பு தொழில், கோவையில் மோட்டார் பம்புசெட்டுகள் உற்பத்தி தொழில் முடங்கி உள்ளது.

நமது நாட்டில் உற்பத்தியாகும் நூலுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூலுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால் பஞ்சாலை தொழிலாளர்களும், வெளிமாநிலங்களில் இருந்து வேலைதேடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழப்பை சந்தித்து பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசை கண்டித்து வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டம் தொடர்பாக திட்டமிடுவதற்கான கூட்டம் வருகிற 28-ந்தேதி திருச்சியில் நடைபெறும். தமிழகத்தில் தொழிலாளர் துறை முழுமையாக முடங்கி உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வருகிற 5-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story