கடமலை–மயிலை ஒன்றியத்தில் வீடு, வீடாக பணம் வசூலித்து வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்


கடமலை–மயிலை ஒன்றியத்தில் வீடு, வீடாக பணம் வசூலித்து வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்
x
தினத்தந்தி 20 Dec 2017 3:30 AM IST (Updated: 20 Dec 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

கடமலை–மயிலை ஒன்றியத்தில் வீடு, வீடாக பணம் வசூலித்து வாய்க்காலை விவசாயிகள் சீரமைத்தனர்.

கடமலைக்குண்டு,

கடமலை–மயிலை ஒன்றியத்தில் பெரியகுளம், சாந்தநேரி, பஞ்சந்தாங்கி, செங்குளம் உள்ளிட்ட இடங்களில் 10 கண்மாய்கள் உள்ளன. இதில் செங்குளம் உள்ளிட்ட சில கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால் மூலமாகவும், மற்ற கண்மாய்களுக்கு ஓடையில் இருந்து வருகிற தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

இந்த கண்மாய்கள் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடமலை–மயிலை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களை, தனியார் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் செடி, கொடிகளும் கண்மாய்களை ஆக்கிரமித்துள்ளன.

இதனால் மழைக்காலத்தில் கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக கண்மாய்களை அளவீடு செய்து கரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அதன்பின்னர் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன.

கடந்த 3 ஆண்டுகளில், இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், கண்மாய்களின் பரப்பளவு குறுகி கொண்டே போகிறது.

இதேநிலை நீடித்தால் சாந்தநேரி, பஞ்சந்தாங்கி உள்ளிட்ட கண்மாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி விடும். இதேபோல சில கண்மாய்களில், தனிநபர் ஆக்கிரமிப்பு இல்லையென்றாலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்து படர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக தண்ணீர் செல்லக்கூடிய வாய்க்கால்கள் புதர் மண்டி காணப்படுகிறது. கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைத்தால் மட்டுமே விவசாயம் செழிப்படையும் என்ற நிலை உள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆக்கிரமிப்பு மற்றும் செடி, கொடிகளை விவசாயிகளே அகற்ற முடிவு செய்தனர். இதற்காக கண்டமனூர் கிராமத்தில் விவசாயிகள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கிராம மக்களிடம் பணம் வசூலித்து ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி வீடு, வீடாக வசூலித்த பணத்தின் மூலம் விவசாயிகள் கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்தினர்.

மயிலாடும்பாறை வைகை ஆற்றில் இருந்து, பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலை அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று தூர்வாரி சீரமைத்தனர். இதேபோல் அனைத்து கண்மாய்களை தூர்வார விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகளும் துணையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Next Story