ரூ.60 லட்சத்தில் அகலப்படுத்தும் முன்பாக திருச்சி பறவைகள் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?


ரூ.60 லட்சத்தில் அகலப்படுத்தும் முன்பாக திருச்சி பறவைகள் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 20 Dec 2017 4:15 AM IST (Updated: 20 Dec 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பறவைகள் சாலையில் ரூ.60 லட்சத்தில் சாலை அகலப்படுத்தும் முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

திருச்சி,

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பறவைகள் சாலை திருச்சி ஜங்ஷன் பகுதியையும், ஒத்தக்கடை பகுதியையும் குறுக்கு வழியாக இணைக்கும் ஒரு முக்கியமான சாலையாகும். இந்த சாலை தலைமை தபால் நிலையத்திற்கு பின்னால் அமைந்து இருப்பதால் பாரதியார் சாலையில் ஏதாவது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால் அதற்கு மாற்றாக போக்குவரத்தை திருப்பி விடும் ஒரு மாற்று சாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்னும் ஒரு வார காலத்தில் ரூ.13¾ கோடி திட்ட மதிப்பீட்டில் பல சாலைகள் அகலப்படுத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட இருக்கிறது. அப்படி அமைக்கப்படும் சாலைகளில் பறவைகள் சாலையும் ஒன்று. மாநகராட்சியின் 14-வது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பறவைகள் சாலையானது ரூ.60 லட்சத்தில் சுடுகலவை மற்றும் பேவர் எந்திரம் உதவியுடன் அகலப்படுத்தப்படும் என மாநகராட்சியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பறவைகள் சாலையை அகலப்படுத்தும் முன்பாக இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டியது மாநகராட்சியின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். சுமார் 50 அடி அகலத்திற்கும் குறையாத இந்த சாலையின் ஒரு பகுதியில் பழுதடைந்த பஸ் ஒன்று சக்கரங்கள் கழற்றப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வருட கணக்கில் நிறுத்தப்பட்டு உள்ளது. இது தவிர பல தனியார் ஆம்னி பஸ்களுக்கும் இந்த சாலை தான் திறந்த வெளி பார்க்கிங் பகுதியாக உள்ளது. மேலும் இந்த சாலையில் கார், இரு சக்கரவாகனங்களை பழுதுபார்க்கும் பட்டறைகள், உதிரி பாகங்களை பொருத்தும் கடைகள் எல்லாம் தங்களது எல்லையை தாண்டி சாலையையும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இந்த சாலையில் தற்போது 20 அடி அகலத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிகிறது. இந்த ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே சாலையை அகலப்படுத்தி தார்சாலை அமைக்கும் முன்பாக இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யம் இன்றி, பாரபட்சம் காட்டாமல் அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும். 

Next Story