சாணார்பட்டி பகுதியில் தீவிர பயிற்சி: ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்
சாணார்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டுவதற்காக காளைகள் தயாராகி வருகின்றன.
கோபால்பட்டி,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் தவசிமடை, கொசவப்பட்டி, புகையிலைப்பட்டி, நத்தமாடிப்பட்டி, வீரசின்னம்பட்டி, மறவப்பட்டி, உலகம்பட்டி, பழனி, ஏ.வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சாணார்பட்டி ஒன்றியத்தில் கொசவபட்டி, தவசிமடை, புகையிலைபட்டி, சாணார்பட்டி, வேம்பார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 50–க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து இந்த காளைகளுக்கு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாடிவாசல்போல் இரு பக்கமும் மரங்கள் வைத்து அதில் மாடுகளை வரவழைத்து பழக்கப்படுத்துகின்றனர். மேலும் நீச்சல் பயிற்சி, கொம்புகளால் மண்ணை குத்தி எடுக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்கவும் மாடுபிடி வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கொசவபட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவரும், திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகியுமான பிரிட்டோடேவிட்தாஸ் கூறும்போது, சாணார்பட்டி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்காக மேட்டுக்கடை கோவில் குளம் மற்றும் சிங்கம்புணரி பகுதியில் உள்ள குளங்களுக்கு அழைத்து சென்று காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், காளைகளுக்கு சத்தான உணவு பொருட்களான கோதுமை, உளுந்து தவிடு, பருத்திக்கொட்டை, பச்சைதவிடு ஆகியவற்றை கொடுக்கிறோம். நல்ல காற்றோட்டமான இடங்களில் மேய்ச்சலுக்கு விடுதல், மண் மேடுகளில் முட்டி கிளறும் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதில் இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபடுகிறார்கள். நாட்டு இன மாடுகளை காப்பாற்ற ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறுவது அவசியம். இதற்கான எதிர்ப்புகளை சட்ட ரீதியாக போராடி வெற்றி பெறுவோம் என்றார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இதையொட்டி இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. எனவே ஜல்லிக்கட்டிற்கான முன்னேற்பாடு பணிகளில் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.