நாசிக் அருகே மினி லாரி கவிழ்ந்து 2 பேர் பலி: 35 பேர் படுகாயம்


நாசிக் அருகே மினி லாரி கவிழ்ந்து 2 பேர் பலி: 35 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Dec 2017 9:30 PM GMT (Updated: 19 Dec 2017 9:26 PM GMT)

நாசிக் அருகே மினி லாரி கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர். 35 பேர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாசிக்,

நாசிக் அருகே மினி லாரி கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர். 35 பேர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமண கோஷ்டி

நாசிக் மாவட்டம் வாடிவ்ஹாரே கிராமத்தில் மும்பை– ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், திருமண கோஷ்டியினர் இருந்தனர். வால்தேவி பாலம் அருகே அந்த லாரி சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது.

இதனால், லாரிக்குள் இருந்தவர்கள் தள்ளாடியபடி அபயக்குரல் எழுப்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவத்தில், லாரியில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 35 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

தீவிர சிகிச்சை

தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாசிக் சிவில் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் கோபால் பவார் (வயது 25), கார்த்திக் மாலி (5) என்பது தெரியவந்தது.

திருமண கோஷ்டி சென்ற மினி லாரி, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணமகன் பலி

இதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மற்றொரு விபத்தில் 26 வயது மணமகன் நிலேஷ் என்பவர் துடிதுடித்து பலியானார். அவரது ரத்தச்சுவடு மறைவதற்குள் மற்றொரு துரதிருஷ்டவசம் நடந்து 2 பேரை பலி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story
  • chat