கிறிஸ்தவ ஆலயங்களை பழுது பார்க்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் லதா தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்க அரசு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை,
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் செயல்படும் கிறிஸ்தவ ஆலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நிதிஉதவி பெற விரும்பும் கிறிஸ்தவ ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு இருத்தல் வேண்டும். ஆலயம் கட்டப்பட்ட இடம் பதிவு துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். ஆலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். ஆலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதிஉதவியும் பெற்றிருத்தல் கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதிஉதவி அளிக்கப்பட்ட ஆலயத்திற்கு மறுமுறை நிதிஉதவி 5 ஆண்டுகளுக்கு பின்னரே வழங்கப்படும்.
இந்த நிதிஉதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து கிறிஸ்தவ ஆலயங்களை தல ஆய்வு மேற்கொள்ளும்.
கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதிஉதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதிஉதவி 2 தவணைகளாக ஆலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.