பொள்ளாச்சி பகுதியில் காய்ந்த தென்னைமரத்துக்கு ரூ.1500 இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகள் வற்புறுத்தல்
பொள்ளாச்சி பகுதியில் காய்ந்த தென்னைமரத்துக்கு ரூ.1500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று முறையீட்டுக்குழுக்கூட்டத்தில் விவசாயிகள் வற்புறுத்தினர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரன் முன்னிலை வகித்து கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் கிணத்துக்கடவு தாசில்தார் விமலா உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மெடிக்கல் பரமசிவம், சின்னச்சாமி, பட்டீசுவரன், முத்துசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:–
பொள்ளாச்சி பகுதியில் 2 பருவ மழையும் பொய்த்து போனதால் தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. காய்ந்ததென்னை மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு ரூ.1500 இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களின் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளனர். வறட்சியால் வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளிடமிருந்து வங்கி அதிகாரிகள் கடன் தொகையைச் செலுத்த வற்புறுத்து கின்றனர். விவசாயிகள் நிலத்தை அடமானம் வைத்து பெற்ற கடன் தொகை நில மதிப்பிற்கு குறைவாகத்தான் பெற்றுள்ளனர். அதனால் வங்கிகள் மீண்டும் கடன் வழங்க வேண்டும்.
பொள்ளாச்சியிலிருந்து உடுமலை செல்லும் (எண்–51) அரசு டவுன் பஸ் காலை, இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அரசு புறநகர் பஸ்கள் கோலார்பட்டியல் பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. பஸ்கள் காலியாகச் சென்றாலும் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கின்றனர். பொள்ளாச்சி–கோட்டூர் ரோடு ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சேவை சாலையை திறந்து விட வேண்டும். ஆனைமலை பேரூராட்சி குடியிருப்பு பகுதியிலிருந்து கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் சுகாதாரம் பாதிப்படைகின்றன. மேலும் ஆழியாற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை தன்னார்வ தொண்டர்கள் அகற்றி வருகின்றனர். அப்பணியின் போதுபாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பொதுப்பணித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆனைமலை பழைய ஆயக்கட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர்விடும் தருணத்தில் உள்ளதால் 5 வாய்கால்களிலும் தடையில்லாமல் தொடர்ந்துதண்ணீர் விட வேண்டும். மேலும் இங்கு 4100 ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடைக்கு வரஉள்ளன. ஆகவே இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்அமைக்க வேண்டும். குளப்பத்து குளத்தில் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்மால் 600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கிணத்துக்கடவு அருகில் உள்ள கோத வாடிக்குளம் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின்கரையை பலப்படுத்தி தூர்வார வேண்டும். குளத்தில் தண்ணீர் விட்டு நிரப்பினால் பாசனத்திற்கு வசதியாக இருக்கும்.
பி.ஏ.பி. வட சித்தூர் கிளைவாய்க்காலில் இருந்து எம்மேகவுண்டன் பாளையம், செட்டிபாளையம், பட்டணம் வரை செல்லும் வாய்காலில் குழாய் அமைத்து தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆழியார் அணை பூங்கா முன்பு நெடுஞ் சாலைத்துறை ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தைபொதுப்பணித் துறை வசூலித்துவருகிறது. கோட்டூர் பேரூராட்சிமூலம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும், ஆமியார்அணை பூங்கா கட்டணத்தை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.