பெருந்துறை அருகே பனியன் நிறுவன வேன் மீது பஸ் மோதல்; தொழிலாளி சாவு
பெருந்துறை அருகே பனியன் நிறுவன வேன் மீது பஸ் மோதியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை,
கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் மேற்குப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். இறந்துவிட்டார். இவருடைய மனைவி பூங்கொடி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). பூங்கொடியும், அருண்குமாரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இதற்காக 2 பேரும் வெள்ளாங்கோவிலில் இருந்து அந்த நிறுவனத்தின் வேனில் தினமும் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இதேபோல் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பனியன் நிறுவன வேன் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 12 தொழிலாளர்கள் இருந்தனர். பெருந்துறையை அடுத்த நல்லாம்பட்டி அருகே உள்ள புளியம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ், வேனின் பின்புறத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேனின் பின்புறத்தில் இருந்த அருண்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த வேனில் வந்த அதே ஊரை சேர்ந்த செல்வி (41) என்பவரும் படுகாயம் அடைந்தார். தன் கண் எதிரே மகன் இறந்ததை கண்டதும் பூங்கொடி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே செல்வி மற்றும் பூங்கொடியை அங்கிருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுபற்றி அறிந்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.