திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்,
அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் எல்லம்மாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தெற்கு மாநகர செயலாளர் கனகராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஞானதம்பி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி அமைப்பாளர்கள், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 7–வது ஊதிய குழு பரிந்துரைப்படி 21 மாதம் நிலுவையில் உள்ள சம்பள தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். முடிவில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பாக்கியம் நன்றி கூறினார்.