திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் பிப்ரவரி மாதத்திற்குள் தனிநபர் கழிவறை கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறை வசதி நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி கூறினார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சியில் உள்ள பாப்பன்குப்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் குணம்மா கோபால்நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா 286 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் 100 பேருக்கும், 75 பேருக்கு ஸ்மார்ட் கார்டு என மொத்தம் 461 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளுக்கான சான்றிதழ்களை கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்.
விழாவில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பில் வட மாநிலத்தினருக்கு தரும் முன்னுரிமையை உள்ளூர்வாசிகளுக்கு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையை எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட கலெக்டரிடம் முன்வைத்தார்.
சுகாதாரத்திற்கு முன்னுரிமை
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:-
இந்தியாவில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை கொடுப்பது நமது தமிழக அரசு தான். திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் 1½ மாதத்திற்கு முன்பு இருந்தது. சுகாதாரத்துறை உள்பட அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்றி அதனுடைய தாக்கத்தை இன்றைக்கு குறைத்து உள்ளனர். மேலும் டெங்கு தொடர்பாக தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
சில இடங்களில் பல முறை சொல்லியும் கேட்காத சிலருக்கு இது தொடர்பாக அபராதம் விதிக்கும் நிலைமையும் இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 பேரிடம் இருந்து சுமார் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அபராதம் விதிப்பது முக்கியமானது அல்ல. மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் குறிக்கோள் ஆகும்.
கழிவறை வசதி இல்லை
சித்தராஜகண்டிகை ஊராட்சியில் இன்னும் 151 வீடுகளுக்கு தனிநபர் கழிவறை வசதி இல்லை. வீடு கட்டியவர்களில் சிலர் தங்களது வீட்டில், அரசு கழிவறை கட்டி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். கழிவறை என்பது அனைவருக்கும் தேவையானது.
பெரும்பாலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதே நோய் வருவதுதற்கு 80 சதவீத காரணம் ஆகும். ஒரு வீட்டிற்கு சமையல் அறை எவ்வளவு முக்கியமோ அதுபோல கழிவறையும் முக்கியம். என்னுடைய வீட்டுக்கு கழிவறை கட்டிகொள்ள வேண்டியது என்னுடைய உரிமை என்ற நிலையில் பொதுமக்கள் முன்வந்து கழிவறைகளை கட்டி கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுகொள்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 80 சதவீதம் வீடுகளிலும் தனிநபர் கழிவறை இருக்கிறது. வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் மாவட்டத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் தனிநபர் கழிவறையை கொண்டு வருவதுதான் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் ஆகும். பொதுமக்களின் ஒத்துழைப்போடு அதனை நிறைவேற்றுவோம். மத்திய, மாநில அரசுகளின் குறிக்கோளும் அதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோரிக்கை மனு
மேலும் பாத்தபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை என்றும், இதனால் தினமும் பள்ளி மாணவர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக மேற்கண்ட கிராம மக்கள் சார்பாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக கிராம நிர்வாக அதிகாரி சிவசுப்பிரமணியம் வரவேற்றார். முடிவில் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் முரளி நன்றி கூறினார்.
செம்பேடு
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் செம்பேடு கிராமத்தில் 721 குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்களில் 542 குடும்பத்தினர் கழிவறையுடன் கூடிய வீடுகளை கட்டியுள்ளனர். 68 குடும்பத்தினர் கழிவறை இல்லாமல் வீடுகளை கட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு தமிழக அரசின் தனிநபர் கழிவறை திட்டத்தின் மூலம் தலா ரூ.12 ஆயிரம் நிதியை எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பணியை நேற்று 12 பேர் ஆரம்பித்தனர். இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தொடங்கி வைத்து பணியை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஸ்ரீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஜெரால்டு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story