போலீஸ் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது


போலீஸ் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டம் பால விடுதி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அபிமன்யூ(வயது 56). இவர் அருகில் உள்ள சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்திலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டு விஜய்குமார் பணியில் இருந்தார். அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தார்.

அந்த வாலிபரிடம் ஏட்டு, “ஏன் அரிவாளுடன் வந்திருக்கிறாய்?” என கேட்டார். அதற்கு அவர், “உங்களை வெட்ட வந்திருக்கிறேன்” என கூறியபடி அரிவாளால் ஏட்டை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஏட்டு அங்கு கிடந்த நாற்காலியை வாலிபர் மீது தள்ளிவிட்டார். அந்த நேரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அபிமன்யூ போலீஸ் நிலையத்திற்குள் வந்தார்.

அரிவாளுடன் நின்ற வாலிபரை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து அவரை பிடிக்க முயன்றார். மேலும் அரிவாளை கீழே போடும்படி கூறினார். ஆனால் அந்த வாலிபர் அரிவாளால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட பாய்ந்தார். அவர் பின்வாங்கி போலீஸ் நிலைய வளாக பகுதிக்கு வந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முயன்றார். அப்போது அரிவாளால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் வலது புற காது பகுதியில் வெட்டினார். தொடர்ந்து வெட்ட முயன்ற வாலிபரை அங்கிருந்த சக போலீசார் மற்றும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

இதற்கிடையில் பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் சிந்தாமணிபட்டி அருகே உள்ள கரிச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகாந்த்(29) என தெரியவந்தது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அதற்காக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

வீட்டில் இருந்து வெளியேறி வந்த விஜயகாந்த் வருகிற வழியில் கருப்புசாமி கோவிலில் அரிவாளை எடுத்து வந்ததும் தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் விஜயகாந்தை கைது செய்தனர். 

Next Story