கூடுவாஞ்சேரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி பெண் உள்பட 2 பேர் கைது


கூடுவாஞ்சேரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் பெருமாட்டுநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கே.எஸ்.ரவி. தி.மு.க. பிரமுகர். இவரது வீட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் வெடிகுண்டு வீசியது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வெடிகுண்டு வீசிய நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகிறார்கள்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கொல்ல முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி - ஆதனூர் சாலையில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்தனர். அந்த காரில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நெடுங்குன்றம் சூர்யா மற்றும் காவாங்கரை விஜி, ஆதனூர் சைலு, அவரது மனைவி பொன்மலர், ஊரப்பாக்கம் தீபக் ஆகியோர் இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரின் அருகில் செல்ல முயன்றார். அப்போது அந்த கும்பல் இன்ஸ்பெக்டரை பார்த்து காரின் அருகில் வந்தால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு, அவர் மீது வெடிகுண்டு வீச முயன்றனர். இருப்பினும் போலீசார் காரின் அருகில் செல்ல முயன்றபோது பொன்மலர் தவிர மற்ற 4 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தினர்.

2 பேர் கைது

தீபக் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். காரில் அமர்ந்து இருந்த பொன்மலரும் பிடிபட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபக் (வயது 22), பொன்மலர் (25) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரவுடிகள் பயன்படுத்திய கார், 2 வீச்சு அரிவாள்கள், ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஒடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story