காஞ்சீபுரத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த 10 கலைஞர்கள் விருதுக்கு தேர்வு கலெக்டர் தகவல்
காஞ்சீபுரத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த 10 கலைஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
தமிழகத்தின் கலைப்பண்புகளை மேம்படுத்தவும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலம் ஆண்டுதோறும் 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளுக்கான காஞ்சீபுரம் மாவட்ட கலை விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை காஞ்சீபுரம் மண்டல உதவி இயக்குநர் குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, கலைமணிச்சுடன் சியாமகிருஷ்ணன், குரலிசை ஆசிரியர் கலை முதுமணி ராஜநிதி, கலை நன்மணி வேணுகோபால், கலை சுடர்மணி லதாரவி ஆகியோர் கலந்துகொண்டு 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுக்குரிய 10 கலைஞர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்டனர்
அப்போது கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-
2015-2016-ம் ஆண்டுக்கு கலை இளமணி விருதுக்கு சிறுசேரியை சேர்ந்த வாய்ப்பாட்டு மற்றும் கீபோர்டு பிரிவு ராம் மணிகண்டனும், கலை வளர்மதி விருதுக்கு காஞ்சீபுரம் பரதநாட்டியம் பிரிவு பாண்டியனும், கலைச்சுடர்மணி விருதுக்கு குரோம்பேட்டை பரதநாட்டியம் பிரிவு அர்ச்சனா மகேசும், கலை நன்மணி விருதுக்கு சேத்துப்பட்டு கிராமிய நாடகம் மற்றும் தெருக்கூத்து பிரிவு சண்முகம் என்கிற சிங்கார சண்முகமும், கலை முதுமணி விருதுக்கு காஞ்சீபுரம் சிற்பம் செய்தல் பிரிவு வீரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2016-2017-ம் அண்டுக்கு கலை இளமணி விருதுக்கு குரோம்பேட்டையை சேர்ந்த பரதநாட்டியம் பிரிவில் மாளவிகாவும், கலை வளர்மணி விருதுக்கு காஞ்சீபுரத்தை சேர்ந்த ஓவியம் பிரிவில் டில்லிபாபுவும், கலை சுடர்மணி விருதுக்கு குன்றத்தூரை சேர்ந்த நாதசுரம் பிரிவில் வெங்கடேசனும், கலை நன்மணி விருதுக்கு ஓரிக்கையை சேர்ந்த கைச்சிலம்பாட்டம் மற்றும் பாடகர் பிரிவில் சேகரும், கலை முதுமணி விருதுக்கு காஞ்சீபுரத்தை சேர்ந்த பன்னூல் ஆசிரியர், எழுத்தாளர், மூத்த பத்திரிக்கையாளருமான சரவணபெருமாள் என்கிற சி.இ.எஸ்.பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story