முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் இலவச அரிசி தொடர்ந்து வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்
புதுவையில் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. நிதி நெருக்கடி காரணமாகவும், இலவச அரிசிக்கான கோப்பில் கவர்னர் கிரண்பெடி கையெழுத்திட மறுத்ததாலும் கடந்த சில மாதங்களாக இந்த அரிசி தொடர்ந்து வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து யாருக்காவது இலவச அரிசி வேண்டாம் என்றால் அவர்களாகவே முன்வந்து அரிசியை விட்டு கொடுக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் இலவச அரிசி திட்டத்தை மாதந்தோறும் தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசுத்துறை செயலாளர்கள் கந்தவேலு, சுந்தரவடிவேலு, குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிதி நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் நிதிநிலை எவ்வாறு இருந்தாலும் மாதந்தோறும் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்துவது, அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.