கொரட்டூரில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தவர், கால்டாக்சி டிரைவர்
கொரட்டூரில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தவர், கால் டாக்சி டிரைவர் என்பது அடையாளம் தெரிந்தது.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் 200 அடி சாலையை ஒட்டி உள்ள கேனால் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் நேற்றுமுன்தினம் வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
அவருடைய முகம் அடையாளம் காணமுடியாத அளவுக்கு முற்றிலும் வெட்டி சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையானவர் யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
கால் டாக்சி டிரைவர்
அதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவரான பிரபாகர்(வயது 34) என்பது தெரிய வந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஈக்காட்டுத்தாங்கலில் தங்கி வேலை செய்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த உதயபாலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பராக பழகி வந்தார். அடிக்கடி உதயபாலனை தேடி அவரது வீட்டுக்கு சென்ற போது, அவருடைய மனைவி சூரியரேகாவுடன் பழக்கம் எற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
கொலை
இதை அறிந்த உதயபாலன், தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி பிரபாகரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் பலமுறை தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகர், கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி உதயபாலனை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கிண்டி போலீசாரால் பிரபாகரும், உதயபாலனின் மனைவி சூரியரேகாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 10-ந் தேதிதான் பிரபாகர், சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி வந்தார். அவர் தினமும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் கையெழுத்து போட வேண்டும். இதற்காக அவர், கொளத்தூர் ரெட்டேரியில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கி இருந்து எழும்பூர் கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்து உள்ளார்.
செல்போனில் பேசியவர்கள் யார்?
இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் எழும்பூர் கோர்ட்டில் கையெழுத்து போட சென்ற பிரபாகர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில்தான் அவர், கொரட்டூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரபாகருடன் கடைசியாக அவரது செல்போனில் பேசியவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில், சம்பவத்தன்று கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வந்த பிரபாகரை, கொலை செய்யப்பட்ட உதயபாலனின் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசி இருப்பதை கண்டுபிடித்தனர்.
பழிக்குப்பழி
கொலை நடந்த அன்று உதயபாலனின் நண்பர்கள் 4 பேர், பிரபாகரை நைசாக பேசி அழைத்துச்சென்று கெனால் சாலையில் உள்ள மதுக்கடை பாரில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் வைத்து உதயபாலனின் கொலைக்கு பழிக்குப்பழியாக பிரபாகரை கொலை செய்து உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தலைமறைவாக உள்ள உதயபாலனின் நண்பர்கள் 4 பேரை கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story