அண்ணி-மாமியார் கொலை வழக்கில் தலைமறைவான ஆட்டோ டிரைவரை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
அண்ணி-மாமியாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பூந்தமல்லி,
திருவேற்காடு கோலடி, அன்பு நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 40), பூ வியாபாரி. இவருடைய மகள் தீபா (20). இவர், அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இவர்களுடன் முனியம்மாளின் தாயார் பாக்கியம்மாளும் (80) வசித்து வந்தார்.
முனியம்மாளின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய தம்பியான ஆட்டோ டிரைவர் பூபாலன் (30) அடிக்கடி தனது அண்ணியிடம் செலவுக்கு பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
கடந்த 2-ந் தேதி இரவு வழக்கம் போல் அண்ணி வீட்டுக்கு வந்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட பூபாலன், பணம் தராத ஆத்திரத்தில் தனது அண்ணி முனியம்மாளை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்தார். மாமியார் பாக்கியம்மாளையும் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியம்மாளும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தலைமறைவு
இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பூபாலனை தேடி வருகின்றனர்.
அவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை அதன் உரிமையாளர் வீட்டில் விட்டு விட்டு, செல்போனை கால்வாயில் வீசி விட்டு தலைமறைவாகி விட்டார். அந்த செல்போன் சிக்னல் திருவேற்காடு பகுதியிலேயே காட்டியதால் போலீசார் இங்கேயே தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி விட்டு எங்கோ தலைமறைவாகி விட்டார்.
ஆட்டோக்களில் நோட்டீஸ்
பூபாலனை பிடிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஆட்டோக்களில் அவரது புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ்களை ஒட்டி வைத்து உள்ளனர். பூபாலனை கண்டால் தகவல் தெரிவிக்கும்படி போலீசாரின் செல்போன் எண்களையும் அந்த நோட்டீசில் தெரிவித்து உள்ளனர்.
அவருக்கு அதிக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாததால் அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்பது தெரியவில்லை. அவரிடம் செல்போனும் இல்லாததால் அந்த சிக்னலை வைத்து கண்டுபிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.
பூபாலன் மதுரையில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு தனிப்படையினர் அங்கு விரைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story