நான் மேயராக இருந்த போது சென்னையில் 44 பாலங்கள் கட்டப்பட்டன சைதை துரைசாமி அறிக்கை


நான் மேயராக இருந்த போது சென்னையில் 44 பாலங்கள் கட்டப்பட்டன சைதை துரைசாமி அறிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது சென்னையில் 44 பாலங்கள் கட்டப்பட்டதாகவும், 3 லட்சத்து 2ஆயிரத்து 878 பணிகள் முடிக்கப்பட்டதாகவும் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “7 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஒரு பாலமாவது கட்டி இருக்கிறீர்களா?” என்று ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். சென்னை மாநகர மேயராக 5 ஆண்டுகள் பணியாற்றி, அவரைவிட அதிக பாலங்கள் கட்டியவன் என்பதால், விளக்கம் தரவேண்டியது எனது கடமை.

ஸ்டாலின் மேயராக இருந்த 1996-2001 வரை 27 பாலங்கள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அவற்றில் 10 பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன. அடுத்த தி.மு.க. மேயரின் 2006-2011 காலத்தில் 46 பாலங்கள் அறிவிக்கப்பட்டு 15 பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன.

நான் மேயராக பணியாற்றிய 2011-2016 காலங்களில் ரூ.294.28 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 71 பால பணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் 37 சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்களை மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 21 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 13 பாலப்பணிகள் தொடங்க உள்ளன.

விதிகளை பின்பற்றி நடந்தேன்

இதுதவிர, தி.மு.க. காலத்தில் கிடப்பில் போடப்பட்ட தங்கசாலை மேம்பாலம், வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, மணியக்கார சத்திர தெரு சுரங்கப்பாதை, கத்திவாக்கம் காக்ரேன் ரெயில்வே மேம்பாலம் போன்ற 7 பாலப்பணிகள், 46.95 கோடி ரூபாய் செலவில் அ.தி.மு.க. காலத்தில் நிறைவேற்றப்பட்டன.

பொதுவாக பாலங்கள் கட்டுவதற்கு முன்பு, பொதுமக்களிடம் கருத்து கேட்பு, கள ஆய்வு, வல்லுனர் ஆலோசனை, நில ஆர்ஜிதம் போன்றவை செய்யப்பட வேண்டும். நான் பதவியில் இருந்த 5 ஆண்டு காலமும் இந்த விதிகளை பின்பற்றி நடந்து வந்தேன். ஆனால், முந்தைய தி.மு.க. காலத்தில் இந்த ஒழுங்குகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல், விரும்பிய இடங்களில் எல்லாம் சின்னச்சின்னதாக பாலங்கள் கட்டப்பட்டன.

அதனால் தான் அடையாறு கோட்டூர்புரம், மகாலிங்கபுரம், ரங்கநாதன் தெரு பாலங்கள் மக்களுக்கு எந்த பயனும் தரவில்லை, போக்குவரத்து நெரிசலும் தீரவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு வல்லுனர் ஆலோசனையுடன் பாலங்கள் திட்டமிடப்பட்டன. அதற்கு உதாரணமாக அண்ணா சாலையில் இருந்து மகாலிங்கபுரம் வழியாக லயோலா கல்லூரி வரை ஒருவர் தங்கு தடையின்றி 2 அல்லது 3 நிமிடங்களில் செல்லும் வகையில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

கொளத்தூர்-வில்லிவாக்கம் மேம்பாலம்

அது போலவே ஈகா தியேட்டர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை மற்றும் மத்திய கைலாஷ் முதல் ராஜீவ்காந்தி சாலை வரையிலும் தடையே இல்லாமல் செல்லும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரிதளவுக்கு குறைந்து போகும்.

1996-2001 தி.மு.க. காலத்தில் கொளத்தூர்-வில்லிவாக்கம் மேம்பாலத் திட்டத்துக்கு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், ரெயில்வே துறையிடம் இருந்து ஒப்புதல் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்டது. அதன்பிறகு, 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் இந்த மேம்பால பணிக்கு ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, இந்த மேம்பால திட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. 2011-ல் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டபோது, மக்கள் இந்த மேம்பாலம் கொண்டு வரவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். மேயர் பதவிக்கு நான் வந்ததும், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெற்றேன்.

தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட...

அதன்படி, ரூ.24.90 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட கொளத்தூர்-வில்லிவாக்கம் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தான் செயலுக்கு வந்துள்ளது. இது தவிர, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் வடபழனி-என்.எஸ்.கே. பாலம் சந்திப்பில் 69 கோடியிலும், கொளத்தூர் ரெட்டேரி வலதுபுறம் ரூ.29 கோடியிலும் மிகப்பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதே போல், ரூ.10 கோடி செலவில் அமைந்தகரை பாலமும், ரூ.47 கோடி செலவில் திருவொற்றியூர் மாட்டுமந்தை ரெயில்வே பாலமும், ரூ.45 கோடியில் போரூர் சந்திப்பு மேம்பாலமும், 92 கோடி செலவில் வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

தற்போது, பிரமாண்டமான அளவில் வேளச்சேரி சந்திப்பில் ரூ.108 கோடியில் பல்லடுக்கு பாலம், பல்லாவரம் சந்தை சந்திப்பில் ரூ.85 கோடியில் பாலம், கோயம்பேடு பஸ் நிலையம், காளியம்மன் கோவில் சந்திப்பில் ரூ.95 கோடி செலவில் பாலம், ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் மேம்பாலம் மற்றும் ரூ.58 கோடி செலவில் கீழ்க்கட்டளை மேம்பாலம் போன்ற திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

44 பாலங்கள்

சுருக்கமாக சொல்வது என்றால் நான் மேயராக இருந்த காலகட்டத்தில் 37 புதிய பாலங்களும், தி.மு.க.வினர் கைவிட்ட 7 பாலங்களும் சேர்ந்து 44 பாலங்கள் கட்டி இருக்கிறேன். ஸ்டாலின் மேயராக இருந்தபோது, 8 ஆயிரத்து 328 பணிகள் முடித்து இருக்கிறார். அடுத்த தி.மு.க. மேயர் 9 ஆயிரத்து 576 பணிகள் முடித்து உள்ளார். ஆனால், என்னுடைய காலகட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 2 ஆயிரத்து 878 பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இந்த புள்ளி விவரங்களில் இருந்து, சென்னையில் அதிக பாலங்கள் கட்டியது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் என்ற உண்மை, உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story