1,000 சதுர மீட்டர் நிலத்திற்காக 6 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் அனகாபுத்தூர்-தரப்பாக்கம் மேம்பால பணிகள்
1,000 சதுர மீட்டர் நிலத்திற்காக 6 ஆண்டுகளாக அனகாபுத்தூர்-தரப்பாக்கம் மேம்பால பணிகள் முடிவடையாமல் பாதியில் நிற்கிறது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் உள்ளது. பல்லாவரம், அனகாபுத்தூர், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில் அடையாறு கடந்து செல்கிறது. பம்மல், பொழிச்சலூர் பகுதியில் இருந்து கவுல்பஜார் வழியாக கெருகம்பாக்கம் செல்லும் வழியில் அடையாறு ஆற்றை கடக்கும் வகையில் தரைப்பாலம் உள்ளது.
இந்த தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கி விடுவதால் அந்த பகுதியில் மேம்பாலம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு தரைப்பாலம் சீரமைக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது. அந்த பகுதியில் மழை வெள்ள காலங்களில் தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது.
பாதியில் நிற்கும் மேம்பால பணிகள்
அனகாபுத்தூரில் இருந்து தரப்பாக்கம் செல்லும் வழியில் குறுக்கிடும் அடையாறு ஆற்றில் தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கடந்த 6 ஆண்டுகளாக ஆயிரம் சதுர மீட்டர் நிலத்திற்காக காத்திருக்கும் அவல நிலை புறநகர் பகுதி மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
அனகாபுத்தூரில் இருந்து தரப்பாக்கம் செல்லும் இந்த பாதையில் அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் தரப்பாக்கம், கோவூர், போரூர் இரண்டாம் கட்டளை, கெருகம்பாக்கம், ராமாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்லலாம். இந்த அடையாறு ஆற்றை கடந்து தினமும் ஏராளமான வியாபாரிகள் கோயம்பேடு சென்று வருகின்றனர்.
2008-ம் ஆண்டு தொடங்கியது
இந்த ஆற்றின் இரு பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், ஆயிரக்கணக்கான மக்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். அடையாறு ஆற்றை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைந்தால் மக்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2008-ம் ஆண்டு இந்த பகுதியில் ரூ.4 கோடியே 70 லட்சம் செலவில் தரப்பாக்கத்தில் இருந்து அனகாபுத்தூர் பகுதிக்கு அடையாறு ஆற்றின் குறுக்கில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது.
தரப்பாக்கம் பகுதியில் இருந்து அனகாபுத்தூர் கரை வரை 11 இணைப்பு தூண்கள் அடுக்குகள் அமைக்கப்படும் என திட்டமிட்டு மேம்பாலத்தின் 9 இணைப்பு தூண்கள் அடுக்குகள் அமைக்கப்பட்டு 80 சதவீத வேலைகள் 2011-ம் ஆண்டு முடிந்தது. ஆனால், மீதம் உள்ள 2 இணைப்பு தூண்கள் அடுக்குகள் அமைக்கப்படவேண்டிய 1,000 சதுர மீட்டர் நிலம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் வருவதால் 18-5-2011 அன்று விமானப்படையினர் மேம்பால பணிகளை நிறுத்தினர்.
பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு
இதன் பிறகு காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்தினர் மேம்பால பணிகளை ஆய்வு செய்தனர். விமானப்படை அதிகாரிகளும், நெடுஞ்சாலை துறையினரும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் அனகாபுத்தூர் பகுதியில் பாலம் அமைக்க விமானப்படை வழங்கிய இடத்திற்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து விமானப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானப்படையினர் தாங்கள் வழங்கும் நிலத்திற்கு ஏற்ற மதிப்பில் மாற்று இடம் இருக்க வேண்டும் என கேட்ட விளக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகம் உரிய பதில் அளித்தது. இதற்கு பிறகும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் 5-6-2015-ல் பாதுகாப்பு அமைச்சகம் மாவட்ட நிர்வாகம் வழங்கிய மாற்று இடத்தை ஏற்க முடியாது என மறுத்து விட்டனர்.
அரசு நிலம் இல்லை
தாம்பரம் விமானப்படை தளம் பகுதி, மாடம்பாக்கம் விமானப்படையினர் குடியிருப்பு பகுதி, மேற்கு தாம்பரம் சிவில் லைன் குவார்ட்டர்ஸ் பகுதி, பல்லாவரம் விமானப்படை கேம்ப் பகுதி ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு பகுதியில் மாற்று இடம் வழங்கினால் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்துவிட்டனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறையினர் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் துறையினர் மேற்குறிப்பிட்ட 4 பகுதிகளிலும் ஆய்வு செய்தபோது விமானப்படையினர் மாற்று இடம் கேட்கும் 4 பகுதிகளிலும் அரசு நிலங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இந்த தகவலை மாவட்ட நிர்வாகத்தினர் 1-9-2015 அன்று விமானப்படை ஆணையத்திற்கு தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை தயார்
இதன் பிறகும் பெங்களூரு, டெல்லியில் உள்ள பாதுகாப்பு துறையினருக்கு தொடர்ந்து பாலம் கட்ட அனுமதி கேட்டு கடிதங்கள் எழுதப்பட்டு வந்தது. 2011-ல் நிறுத்தப்பட்ட மேம்பால பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஆயிரம் சதுர மீட்டர் நிலத்திற்காக பாதுகாப்பு துறையில் 6 ஆண்டுகளாக அனுமதி கேட்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி கொடுத்தால் உடனடியாக மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் தயாராக உள்ளனர்.
மனு அளித்தனர்
ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன், தி.மு.க. மேல்-சபை எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இதற்கு முன்பு இருந்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லியின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்று மனு அளித்து இருந்தனர்.
அதன்பிறகும் அனுமதி கிடைத்தபாடில்லை. தற்போது அவரும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக இல்லை.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எனவே, மக்களுக்கு பயன்தரக்கூடிய இந்த மேம்பால பணிகளுக்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு அனுமதி அளித்தால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
உடனடியாக மத்திய பாதுகாப்புத்துறை மனிதாபிமானத்துடன் செயல்பட்டு அனுமதி அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்
Related Tags :
Next Story