தோகைமலை ராணுவ வீரர் உடலை மீட்பதில் சிக்கல் பனிப்பொழிவால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை


தோகைமலை ராணுவ வீரர் உடலை மீட்பதில் சிக்கல் பனிப்பொழிவால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பனிச்சரிவில் பலியான தோகைமலை ராணுவ வீரர் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை.

தோகைமலை,

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ந் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லையோரம் பக்தூரில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரரான கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கொசூர் பக்கம் நாச்சிகளத்துப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (வயது 33) உள்பட 5 பேர் சிக்கினர்.

பனிச்சரிவில் சிக்கிய மூர்த்தியை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் நேற்று முன்தினம் அவரை பிணமாக மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர். மூர்த்தி பலியானது குறித்து ராணுவ அதிகாரிகள், அவரது மனைவி தமிழரசியின் குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தனர்.

மூர்த்தியின் உடலை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ முகாமிற்கு கொண்டு வந்து அங்கு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் மூர்த்தியின் உடல் இருக்கும் இடத்தின் அருகே ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லையாம். இதனால் மூர்த்தியின் உடலை மீட்டு ராணுவ முகாமிற்கு கொண்டு வர முடியவில்லை என நேற்று மாலை ராணுவ அதிகாரிகள், தமிழரசியின் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

மேலும் இன்று (வியாழக்கிழமை) மூர்த்தியின் உடலை மீட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின் விமானம் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். மூர்த்தியின் உடல் டெல்லியில் இருந்து விமானத்தில் திருச்சி அல்லது கோவை விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினர்.

இதற்கிடையில் இறந்த மூர்த்தியின் மனைவி தமிழரசி மற்றும் பெற்றோர், உறவினர்கள் சோகத்துடன் வீட்டில் உள்ளனர். நாச்சிகளத்துப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அவரது வீட்டின் முன்பு சோகத்துடன் திரண்டு நின்றனர். பெண்கள் பலர் ஒப்பாரி வைத்து அழுதனர். மூர்த்தியின் உடலை அடக்கம் செய்வதற்காக வீட்டின் அருகே இடம் தேர்வு செய்து சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ராணுவவீரர் மூர்த்தி இறந்த துக்கத்தால் அந்த கிராம மக்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். 

Next Story