மகதாயி நதிநீர் பிரச்சினையில் முக்கிய முடிவை வெளியிடுவேன் எடியூரப்பா பேட்டி


மகதாயி நதிநீர் பிரச்சினையில் முக்கிய முடிவை வெளியிடுவேன் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2017 3:00 AM IST (Updated: 21 Dec 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறும் மாற்றத்திற்கான பயண பொதுக்கூட்டத்தில் மகதாயி நதிநீர் பிரச்சினையில் முக்கிய முடிவை வெளியிடுவேன் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

உப்பள்ளியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறும் மாற்றத்திற்கான பயண பொதுக்கூட்டத்தில் மகதாயி நதிநீர் பிரச்சினையில் முக்கிய முடிவை வெளியிடுவேன் என்று எடியூரப்பா கூறினார்.

யோகிஆதித்யநாத் பங்கேற்பு

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாற்றத்திற்கான பயணத்தை கடந்த நவம்பர் மாதம் 2–ந் தேதி தொடங்கினார். கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எடியூரப்பா நேரில் சென்று மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். எடியூரப்பாவின் இந்த பயணம் இன்று(வியாழக்கிழமை) உப்பள்ளிக்கு வருகிறது. அங்கு நேரு மைதானத்தில் இன்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகிஆதித்யநாத் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்கிடையே வட கர்நாடகத்தின் முக்கிய பிரச்சினையான மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக புதுடெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை எடியூரப்பா நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், கர்நாடக பா.ஜனதா முன்னணி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத்ஜோஷி, பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், அனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்பு

இந்த கூட்டம் முடிந்த பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினேன். இதில் கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கரும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மகதாயி நதிநீர் பிரச்சினையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது எனக்கு திருப்தியாக உள்ளது. இதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதை உப்பள்ளியில் நாளை(இன்று) நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் வெளியிடுவேன்’’ என்றார்.

மகதாயி நதிநீர் பிரச்சினையில் குடிநீருக்கு தண்ணீர் பெற்று தருவேன் என்று எடியூரப்பா கடந்த சில நாட்களாக கூறி வந்தார். முறையான பேச்சுவார்த்தை இல்லாமல் இது எப்படி சாத்தியம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில் மகதாயி நதிநீர் பிரச்சினையில் முக்கிய அறிவிப்பை எடியூரப்பா வெளியிடுவதாக கூறி இருக்கிறார்.

குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க...

கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கரிடம் அமித்ஷா ஏற்கனவே இதுபற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. அதனால் மகதாயி நதியில் இருந்து வட கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க கோவா அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் வட கர்நாடகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டங்கள் முடிவுக்கு வரும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அந்த பகுதியில் பா.ஜனதாவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story