மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கம் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் குமார், செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
மணல் தட்டுப்பாட்டை போக்கி கட்டுமான தொழிலையும், மாட்டு வண்டி தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும், மணல் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும், தாலுகாவிற்கு ஒரு மணல் குவாரியும், மணல் குடோனும் அமைத்துக்கொடுக்க வேண்டும், வெளிமாநிலங்களுக்கு மணல் ஏற்றிச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் செயலாளர் அம்பிகாபதி, போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் நாகலிங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மெஹராஜ்பேகம், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முருகன், சிங்காரவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.