மராத்தி படம் புறக்கணிப்பு தியேட்டர் அதிபர்களுக்கு நவநிர்மாண் சேனா எச்சரிக்கை


மராத்தி படம் புறக்கணிப்பு தியேட்டர் அதிபர்களுக்கு நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

சல்மான்கான் படத்துக்காக மராத்தி படம் புறக்கணிக்கப்படுவதாக தியேட்டர் அதிபர்களுக்கு மராட்டிய நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மும்பை,

சல்மான்கான் படத்துக்காக மராத்தி படம் புறக்கணிக்கப்படுவதாக தியேட்டர் அதிபர்களுக்கு மராட்டிய நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

‘டைகர் ஜிண்டா ஹை’

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சல்மான்கான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘டைகர் ஜிண்டா ஹை’. கத்ரினா கைப் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் நாளை (22-ந் தேதி) திரைக்கு வருகிறது.

அதே சமயம், மராத்தி பட இயக்குனர் முரளி நல்லப்பா இயக்கத்தில் தயாரான ‘தேவா ஏக் ஆத்ரங்கி’ என்ற படமும் நாளை திரைக்கு வருகிறது. சல்மான்கான் படம் திரைக்கு வருவதால், ‘தேவா ஏக் ஆத்ரங்கி’ படத்துக்கு போதுமான தியேட்டர் கிடைக்கவில்லை.

இதனால், படக்குழுவினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

நவநிர்மாண் சேனா எச்சரிக்கை

இந்த நிலையில், ராஜ் தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் திரைப்பட பிரிவு தலைவர் அமி கோப்கர், தியேட்டர் அதிபர்களை எச்சரிக்கும் விதத்தில், அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கூறி இருப்பதாவது:-

‘தேவா ஏக் ஆத்ரங்கி’ பட தயாரிப்பாளர்கள் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முயன்றபோது, அதே நாளில் ‘டைகர் ஜிண்டா ஹை’ படம் ரிலீஸ் ஆவதால், மராத்தி படத்துக்கு தியேட்டர் இல்லை என்று தொடர்ச்சியாக பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

மராட்டிய மண்ணில் தியேட்டர் நடத்துகிறோம் என்பதை நீங்கள் அனேகமாக மறந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். மேலும், எங்கள் உணர்வுகள் காயப்படுகிறது என்பதை உங்களுக்கு நினைப்பூட்டும் கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

‘வாழுங்கள், வாழ விடுங்கள்’

‘டைகர் ஜிண்டா ஹை’ பட தயாரிப்பாளர்கள் தங்கள் பெயரையும், செல்வாக்கையும் பயன்படுத்தி அனைத்து தியேட்டர்களையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தயாரிப்பாளர்களின் நிலைமை? அவர்கள் எங்கே போவார்கள்? இதுபோன்ற காலித்தனத்தை மற்ற மாநிலங்கள் சகிக்குமா?

மராத்தி படங்களுக்கான உரிமையை அளிப்பது நமது கடமை. அதற்காக நாங்கள் எதையும் செய்வோம். நாங்கள் அமைதியாக இருப்பதால், பலவீனமானவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எங்கள் மொழியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு புரியும்படியான சிறப்பு மொழியை பயன்படுத்த வேண்டியது இருக்கும்.

‘வாழுங்கள், வாழ விடுங்கள்’ என்ற கொள்கையில் நம்பிக்கை வையுங்கள். மராத்தி படங்களுக்கு சமவாய்ப்பு அளியுங்கள்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story