பன்வாரிலால் செல்லும் பாதையும்... பயணமும்...


பன்வாரிலால் செல்லும் பாதையும்... பயணமும்...
x
தினத்தந்தி 21 Dec 2017 1:30 PM IST (Updated: 21 Dec 2017 1:06 PM IST)
t-max-icont-min-icon

பன்வாரிலால் புரோகித் தன்னுடைய அதிரடி ஆய்வுகள் மூலம் அரசியல் கட்சிகளை அலறவிட்டுள்ள தமிழக கவர்னர்.

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அவரது அதிரடியான ஆய்வுகள், கொஞ்சம் கூட பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல், தமிழக அரசியல் களத்தை சூடேற்றிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், கவர்னரின் அரசியல் ஆய்வு தமிழகம் இதுவரை பார்த்திராத ஒன்று. பதவியேற்பு விழா, பட்டமளிப்பு விழா உள்ளிட்ட ஒரு சில விழாக்களில் மட்டுமே கவர்னரை பார்க்கவும், அவரது பெயரையும் கேட்கவும் பழக்கப்பட்ட தமிழக மக்களுக்கு, ‘கவர்னர் ஆய்வு’ என்று வெளியாகும் செய்திகள் புதிதுதான்.

பொதுவாக, இந்திய அரசியல் அரங்கில் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டது. கடந்த 50 ஆண்டு காலமாக திராவிட கட்சிகளே இங்கு ஆட்சி சிம்மாசனத்தை அலங்கரித்து வருகின்றன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் தமிழக அரசியல், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மிகப்பெரிய பின்னடைவையும், குழப்பமான சூழ்நிலையையும் சந்தித்தது என்னவோ உண்மை. தற்போது அதில் இருந்து மீண்டு, விடுபட்டு மாறுபட்ட அரசியல் கோணத்தில் பயணிக்க தொடங்கியிருப்பதையே தமிழக அரசியலின் சமீபத்திய காட்சிகள் காட்டுகிறது.

தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர்ராவுக்கு பிறகு முழு நேர கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் வழக்கம் போல்... என்ற வார்த்தைக்குள் அடைப்பட்டு இருக்கும் கவர்னராக இல்லாமல், கோவையில் தொடங்கிய ஆய்வு, அதிகாரிகளுடனான ஆலோசனை என புதிய திருப்பத்தை ஏற்படுத்த தொடங்கினார்.

ஆனால், “மாநில நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு அதிகாரமில்லை. மாநில அரசின் அதிகாரத்தை கவர்னர் கையில் எடுத்து இருப்பது மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால்” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல பல்வேறு அரசியல் கட்சியினரும் கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு ஆதரவு கரமும் நீட்டப்படுவதை மறுக்க முடியாது.

எதிர்ப்பு அலைகளையெல்லாம் கடந்து, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், சேலம் என தன்னுடைய ஆய்வு பயணத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலைகளை சுத்தப்படுத்தியும், துண்டு பிரசுரங்களை கொடுத்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். கன்னியாகுமரியை தாக்கிய ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நேற்று முன்தினம் சேலத்தில் கவர்னர் ஆய்வு செய்தபோது சர்ச்சை எழுந்தது. இந்த ஆய்வின்போது, அவர் குப்பைகளை அகற்றினார். இதற்காகவே சுத்தமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவ்வாறு, எதிர்ப்பு, ஆதரவு, பரபரப்பு, சர்ச்சைகள் என கவர்னரின் ஆய்வு பல்வேறு பிரதிபலிப்புகளை தந்தாலும், அது மக்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கவர்னரின் ஆய்வை எதிர்க்கட்சிகள் எதிர்க்க என்ன காரணம்? என்பதும் விவாத பொருளாக மக்கள் முன்பு வைக்கப்பட்டு உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டவே கவர்னர் இதுபோன்று நடந்து கொள்கிறார் என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு, அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வது கவர்னரின் கடமை என்றும், ஆய்வு நடத்த கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் கவர்னர் மாளிகையே விளக்கம் தந்திருக்கிறது.

பக்கத்து மாநிலமான (யூனியன் பிரதேசம்) புதுச்சேரியில் துணை நிலை கவர்னர் கிரண்பெடி நடத்திய ஆய்வு, நடவடிக்கைகள் அங்குள்ள ஆளுங்கட்சியினரால் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், தமிழகத்தில் நிலைமையோ தலைகீழாக உள்ளது. இங்கு கவர்னர் நடத்தி வரும் ஆய்வுகளுக்கு தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு ஆதரவு கரம் நீட்டுகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அமைச்சர்களே வெளிப்படையாக கவர்னரின் ஆய்வை வரவேற்றுள்ளனர். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஆளுகின்ற அரசுகள் 2 விதமான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.

அரசுகள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டாலும், வரவேற்பு, எதிர்ப்பு என்ற 2 விஷயத்தையும் தாண்டி, அரசியல் நோக்கம் இல்லாமல், தமிழகத்திற்கு நன்மை விளைவிக்கும் வகையில் கவர்னரின் ஆய்வு அமைந்தால் அதனை மக்கள் வரவேற்கவே செய்வார்கள். ‘உங்களிடம் பேச ஆசிரியரிடம் தமிழ் கற்று வருகிறேன்’ என்று கவர்னர் மக்கள் மத்தியில் தெரிவித்து இருப்பது, தமிழ் மீதான அவரின் ஆர்வத்தையும், மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான கருவியாகவும் பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், எதிர்ப்பு என்ற விஷயத்தில் தான் புதிய செய்தி பிறக்கும். அது எத்தகைய மாற்றத்தை விளைவிக்க போகிறது என்பதையும், பன்வாரிலால் செல்லும் பாதை, பயணம் தமிழகத்துக்கு பொலிவை தருமா? பலனை தருமா? என்பதையும் தான் நாம் பார்க்க வேண்டும்.

-தனிஷ் ஆனந்த்


Next Story