பள்ளி பஸ்சின் டயர் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்


பள்ளி பஸ்சின் டயர் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:30 AM IST (Updated: 22 Dec 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

பாணாவரம் அருகே பள்ளி பஸ்சின் டயர் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் பாணாவரத்தில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் பாணாவரத்தை சுற்றி உள்ள ஆயல், சூறை, போலிப்பாக்கம், தப்பூர், தாங்கல், பொன்னப்பந்தாங்கல், பன்னியூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களில் உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கும், மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காகவும் பள்ளி சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை ஆயல், சூறை, போலிப்பாக்கம், தப்பூர் ஆகிய கிராமங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் காமாட்சி, மீனாட்சி ஆகியோரை ஏற்றிக் கொண்டு தாங்கல் கிராமத்தில் மாணவ-மாணவிகளை ஏற்ற பள்ளி பஸ் சென்றது.

பஸ்சை பாணாவரத்தை சேர்ந்த ஆதி (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பள்ளி பஸ்சில் பின்பக்கம் 4 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாங்கல் கூட்ரோடு அருகே வளைவில் திரும்பும் போது பஸ்சின் பின்புறம் இடதுபக்கம் இருந்த 2 டயர்கள் திடீரென கழன்று ரோட்டில் ஓடியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் ஆதி பிரேக் போட்டு சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். இதனால் பஸ் கவிழாமல் நடுரோட்டில் நின்றது.

இதனால் அதிர்ஷ்டவசமாக 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகளை கீழே இறக்கி சாலையோரம் அமர வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பள்ளியில் இருந்து வேறு பஸ் வரவழைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story