ஓடும் பஸ்சில் நடந்த கொலை: மேலும் 2 பேர் கைது; ஒருவர் கோர்ட்டில் சரண்


ஓடும் பஸ்சில் நடந்த கொலை: மேலும் 2 பேர் கைது; ஒருவர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:45 AM IST (Updated: 22 Dec 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் வாலிபரை கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

வாடிப்பட்டி,

மதுரை கரிமேட்டை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் அமரேஷ் என்ற அமர்(வயது 22). இவர் கடந்த 15-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் புறப்பட்டு வந்தார். அப்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த தனிச்சியம் பிரிவு அருகே பஸ்சை வழி மறித்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேர் கொண்ட மர்மகும்பல் அமரேசை சரமாரியாக வெட்டி பஸ்சுக்குள்ளே படுகொலை செய்தது. விசாரணையில் 2011-ம் ஆண்டு மதுரையில் நடந்த ராம்பிரசாத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமரேஷ்க்கு தொடர்பு இருப்பதும், அந்த கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் விதமாகதான் இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது. அச்சம்பத்து சுடுகாடு அருகே கொலையாளிகள் பயன்படுத்திய கார், கத்தி, அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர்.

இதற்காக அமைக்கப்பட்ட 3 தனிப்படை போலீசார் மேலபொன்நகரத்தை சேர்ந்த அருண்குமார்(25), அரவிந்த்(21), சத்தியமூர்த்தி(24), ராமர்(23), சுரேஷ்(23) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு உடைய ராம்பிரசாத்தின் அண்ணன் சிறப்பு பிரகாஷ்(28) உள்பட 3 பேரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கொலை வழக்கில் தேடப்பட்ட விளாங்குடியை சேர்ந்த சுரேந்திரன்(27) பரவை மார்க்கெட் அருகிலும், மகபூப்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன்(30)என்பவரை நாகமலைபுதுக்கோட்டை மேம்பாலம் அருகிலும் போலீசார் கைது செய்தனர். சிறப்பு பிரகாஷ் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட 11 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story