நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.48.64 கோடி இழப்பீடு தொகை கலெக்டர் தகவல்


நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.48.64 கோடி இழப்பீடு தொகை  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2017 3:00 AM IST (Updated: 22 Dec 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.48.64 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.48.64 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், வேளாண் துறை இணை இயக்குனர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில் கூறியதாவது:–

நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முடிய இயல்பான மழையை விட தற்போது 271.25 மில்லி மீட்டர் அதிகமாக பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 11 அணைகளிலும் கடந்த ஆண்டை விட, நீர் இருப்பு அதிகம் உள்ளது. ராபி பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

ரூ.48.64 கோடி இழப்பீடு தொகை

2016–17–ம் ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிர் காப்பீடு செய்த 18 விவசாயிகளுக்கு ரூ.51 ஆயிரம், உளுந்து பயிர் காப்பீடு செய்த 20 ஆயிரத்து 205 விவசாயிகளுக்கு ரூ.48 கோடியே 64 லட்சம் இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இவை ஓரிரு நாட்களுக்குள் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மக்காச்சோளம் மற்றும் பாசிப்பயறு காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அந்த தொகையும் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒகி புயல் பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை வருவாய் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை கொண்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டு உள்ளது. 517 விவசாயிகளின் 130.60 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக ரூ.17.66 லட்சம் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதி விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்போது மாவட்டத்தில் உள்ள குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் எளிதாக செல்வதற்கும், கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

இலவச ஆடுகள்

முன்னதாக இந்த கூட்டத்தில், வேளாண் துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ரூ.35 ஆயிரம் மானியத்தில் ஒரு விவசாயிக்கு விவசாய எந்திரம் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை மூலம் 36 ஏழைகளுக்கு இலவச ஆடுகளையும், இறைச்சி கோழி வளர்ப்பு மானியம் ஒருவருக்கு ரூ.2.68 லட்சம் மானியத்துக்கான காசோலை மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு ரூ.33 ஆயிரம் மானியத்துக்கான காசோலையை ஒருவருக்கும், ஆக மொத்தம் 39 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


Next Story