‘குக்கர்’ சின்னத்துக்கு வாக்களித்தால் ரூ.6 ஆயிரம் ‘டோக்கன்’ வினியோகம் செய்ததாக பா.ஜனதா புகார்
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் 20 ரூபாய் நோட்டுகளை, டோக்கன் போல வினியோகித்ததாக பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் நேற்று குற்றம் சாட்டினார்.
சென்னை,
நேற்று முன்தினம் இரவு ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் 20 ரூபாய் நோட்டுகளை, டோக்கன் போல வினியோகித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு அந்த ரூபாய் நோட்டை கொடுத்தால் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் நேற்று குற்றம் சாட்டினார்.
தனது கட்சி தொண்டர் ஒருவருடைய வீட்டில் வழங்கப்பட்ட 20 ரூபாய் நோட்டை காண்பித்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்தவர்கள் 20 ரூபாய் நோட்டை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர். வாக்குப்பதிவின் போது குக்கர் சின்னத்துக்கு ஓட்டு போட்டு, அந்த ரூபாய் நோட்டை எடுத்து வந்தால் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் போலீசில் புகார் கொடுத்தால், எந்தவித பயனும் கிடைக்கப்போவது இல்லை. அவர்களும் வேடிக்கை தான் பார்ப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “தோல்வி பயத்தில் உள்ளவர்கள் இதுபோல புரளி கிளப்பி உள்ளனர். யாராவது கடன் சொல்லி வாக்கு கேட்க முடியுமா?. இதெல்லாமே வெறும் புரளி தான்” என்றார்.
Related Tags :
Next Story