ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் கழிவுநீராக மாறி வரும் பீர்க்கன்காரணை ஏரி தண்ணீர்


ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் கழிவுநீராக மாறி வரும் பீர்க்கன்காரணை ஏரி தண்ணீர்
x
தினத்தந்தி 22 Dec 2017 5:15 AM IST (Updated: 22 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பீர்க்கன்காரணை ஏரியில் குப்பைகள் கொட்டி மாசுபடுவதால் ஏரி நீர், கழிவு நீராக மாறி வருகிறது.

தாம்பரம், 

தமிழகத்தில் ஏரிகள் அதிகம் நிறைந்த மாவட்டம், காஞ்சீபுரம். இந்த மாவட்டத்தின் கிராம பகுதிகளில் உள்ள ஏரிகள் தற்போதும் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காஞ்சீபுரம் மாவட்ட எல்லையில் வரும் பெரும்பாலான ஏரிகளில் உள்ளாட்சி அமைப்புகள் காலம் காலமாக குப்பைகளை கொட்டியும், மழைநீர் கால்வாய் வழியாக கழிவு நீரை ஏரிகளில் திறந்து விட்டும் ஏரி நீரை மாசுபடுத்தி வருகிறது.

இதற்கு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பீர்க்கன்காரணை ஏரியே சிறந்த எடுத்துக்காட்டு. 100 ஏக்கருக்கும் அதிகமாக உள்ள இந்த ஏரியில், வண்டலூர் மலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழை காலங்களில் வரும் மழைநீரால் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் போல பரந்து விரிந்து காணப்பட்டது.

ஆக்கிரமிப்பு

அதன் பிறகு எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெற்று வந்த தொடர் ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது ஏரி சுருங்கிவிட்டது.

ஏரி ஆக்கிரமிப்பாளர்கள், பெரும் மழை பெய்யும் போது தங்கள் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் தண்ணீர் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏரியின் வடக்கு பகுதியில் உள்ள கலங்கல் பகுதியை உடைத்து மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதே வாடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையிலும் இதே நிலை தான் நீடித்தது. இந்த ஏரியில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களால் பெரும்பாலான மழைநீர் வெளியேற்றப்பட்டதால் தாம்பரம் நகராட்சி, முடிச்சூர் சாலை, கிருஷ்ணா நகர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தற்போது ஏரியில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் குறைந்த அளவே தேங்கி உள்ளது.

குப்பைகள் கொட்டப்படுகிறது

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருக்கும் ஏரியை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஏரியை பாதுகாக்க வேண்டிய அரசே அதில் ஒரு பகுதியில் குப்பையை கொட்டி ஏரியை மாசுபடுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பீர்க்கன்காரணை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் இருந்து தினமும் சராசரியாக 6 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இந்த ஏரியின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டப்பட்டு உள்ள ஏரி பகுதியில் குப்பை கிடங்கை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்ட நிலையில் அந்த பகுதியில் இருந்து ஏரிக்குள் குப்பைகள் வந்து கொண்டிருக்கிறது.

கழிவுநீராக மாறும் தண்ணீர்

இதனால் ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் ஏரியில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரும் கழிவு நீராக மாறி வருகிறது. குப்பை கிடங்கை சுற்றி 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் மேய்ந்து அந்த பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளை கேட்ட போது, “பீர்க்கன்காரணை பேரூராட்சியில் பெரும்பாலான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட வேறு எங்கும் இடம் இல்லை. அதனால் வேறு வழி இன்றி ஏரியில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டி வருவதாக” தெரிவித்தனர்.

ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே அந்த பகுதியில் நிலத்தடிநீர் ஆதாரம் என்ற நிலையில் குப்பை கொட்ட இடம் இல்லை என்று கூறி பேரூராட்சியே ஏரியில் குப்பைகளை கொட்டுவது நீர் ஆதாரத்துக்கு எதிரான செயல் என வாதிடும் பொதுமக்கள், முதலில் உடைந்து விழுந்த சுவரையாவது சீரமைத்து குப்பைகள் ஏரி தண்ணீரில் கலக்காமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நடவடிக்கை எடுக்குமா?

“சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் படிப்படியாக அகற்றப்பட்டு, ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெறும்” என காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பீர்க்கன்காரணை ஏரி நீர் வரத்து பகுதிகளில் இருந்த 73 வீடுகளை அதிரடியாக பொது பணித்துறையினர் அகற்றினர். “மற்ற ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்பட்டு பீர்க்கன்காரணை ஏரி முதலில் எந்த நிலையில் இருந்ததோ அதே அளவிலேயே மீட்கப்படும்” என தெரிவித்த வருவாய் துறையினர், “பீர்க்கன்காரணை ஏரி சிறந்த மழைநீர் தேக்கம் உள்ள ஏரியாக மாற்றப்படும்” எனவும் அறிவித்தனர்.

இவைகள் அறிவிப்போடு நின்றுவிடாமல் அதற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரமாக செயல்படுத்தி காட்டவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்துமா?. 

Next Story