ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கர் சிலை சேதம்; நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு
ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீதஞ்சேரியில் சாலை ஓரமாக 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை சிலையின் வலது கை சேதப்படுத்தப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் பரவியதால் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புரட்சி பாரதம் கட்சியினர், பகுஜன் சமாஜ் கட்சியினர் அங்கு விரைந்தனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் இனியன்பஞ்சா, ராஜா, பகுஜன் சமாஜ் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவர் ஜீவா ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் சீதஞ்சேரியில் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், குமார், வெங்கடாசலம், தாசில்தார் கிருபாஉஷா, துணை தாசில்தார் கதிர்வேலு ஆகியோர் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய சிலையை அமைக்க முயற்சி செய்வோம் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. மறியல் காரணமாக ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே நேற்று காலை 7½ மணி முதல் 9½ மணி வரை 2 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story