திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்


திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Dec 2017 5:00 AM IST (Updated: 22 Dec 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தாங்கள் பெற்ற பட்டா ஆவணத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியை நீக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். பின்னர் அங்கு வந்த குணசேகரன் எம்.எல்.ஏ.வை அவர்கள் முற்றுகையிட்டு முறையிட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம், அய்யன்நகர், சிவசக்திநகர், பூச்சக்காடு, சின்னசாமி லே-அவுட், கே.வி.ஆர்.நகர், திருநகர், பாளையக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இவர்களில் பலர் தங்கள் இடத்தை விற்பனை செய்தும், அந்த இடத்தின் பேரில் வங்கியில் அடமான கடன் பெற்றும் வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேற்கண்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட இடங்களின் ஆவணங்களிலும் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது என சார்பதிவாளர் அலுவலக கணினிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாமல் சம்பந்தப்பட்ட நிலத்தில் வசிப்பவர்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் பட்டாவில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் அவர்கள் புகார் மனு கொடுத்து முறையிட்டுள்ளனர்.

இந்தநிலையில் 49-வது வார்டுக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜையை நடத்துவதற்கு நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்தனர். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செங்குந்தபுரம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டவர்களின் பட்டா நிலங்களும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் வங்கியில் கடன் பெற முடியாமலும், விற்கவோ, வாங்கவோ முடியாமலும் சிரமப்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அத்துடன் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் குணசேகரன் எம்.எல்.ஏ.விடம் முறையிடவும் முடிவு செய்து அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் மங்கலம் ரோட்டில் செங்குந்தபுரம் சந்திப்பில் நேற்று காலை 10.30 மணி முதல் காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் தங்கவேல், மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குணசேகரன் எம்.எல்.ஏ. அங்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் மதியம் 12.15 மணி அளவில் திடீரென்று அப்பகுதி பொதுமக்கள் மங்கலம் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் குணசேகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மறியலில் ஈடுபட்டவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மறியலில் ஈடுபட்ட பெண்கள் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கூறும்போது, நாங்கள் விலைக்கு வாங்கிய இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பட்டா நிலத்தை தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று கூறுவதால் வங்கியில் அடமான கடன் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் எங்களால் ஈடுபட முடியவில்லை. பட்டா ஆவணத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்கி, எங்களுக்கு முன்பு இருந்ததைப்போல் பட்டா பெற்றுத்தர வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய குணசேகரன் எம்.எல்.ஏ., இந்த பிரச்சினை திருப்பூர் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அரசின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். விரைவில் முதல்-அமைச்சரிடம் இதுகுறித்து எடுத்துக்கூறுவேன். வருகிற சட்டமன்ற கூட்டத்தில் இதுதொடர்பாக பேசி, உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வேன் என்று உறுதியளித்தார்.

இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ½ மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தால் மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story